‘குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளன’ அசங்க ருவன் பொத்துபிட்டிய
- வீடியோ இணைப்பு -
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்ததாக இலங்கையின் குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கையில் குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
குறித்த வட்டி அதிகரிப்பு காரணமாக குத்தகை மற்றும் வாடகை கட்டணங்களை செலுத்துவோர் வழமையான தொகையை விட ஒரு மடங்கு அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட்டி வீதங்கள் 8.5 வீதமாக இருந்தது. எனினும் அரச சேவையாளர்களுக்கு 18 வீதமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குத்தகை நிறுவனங்களில் நூற்றுக்கு 12 வீதமாக இருந்தது இன்று நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் யார் பேசுவது. 40 ஆயிரமாக காணப்பட்ட மாதாந்த குத்தகை கட்டணம் இன்று 65 ஆயிரமாக மாறியுள்ளது. எவ்வாறு இதனை செலுத்த முடியும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினால் குத்தகை மற்றும் மாதாந்த கடன் கட்டணத்தை செலுத்துவது இன்று மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.என்றார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.