அங்கேயே நிற்கட்டும்

- சாம் பிரதீபன் -

அங்கேயே நிற்கட்டும்
காற்றில் கரைந்துவிடும்
கற்பூரக் கட்டியல்ல நான்
சேற்றில் அமிழ்ந்துவிடும்
மண்புழு நானுமல்ல
விளக்கொளியில் அழிந்துவிட
விட்டில் பூச்சியுமல்ல
உணர நெஞ்சில் உறைக்க
நான் சொல்வேன் கவி
இதில்
கேட்போருக்காக மட்டும்.
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
என்னை உங்களுக்கு தெரியாது!
நான் கோப்பாய் குமார்
குப்பிளான் கணேஷ்
அளவெட்டி அன்ரனி
முளியவளை மனோகர்
நானாட்டான் பிரான்சீஸ்
சேனையூர் செல்வன்
வந்தாறுமூலை வரோதயன்
முற்றுப்பெறாத வரலாறு ஒன்றின்
முழுமுதல் காரணம் கேட்டு
முப்பத்து முக்கோடி தேவர்களும்
இப்போது
வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒற்றை வாயில் ஓராயிரம் புளுகுகளை சுமந்தபடிதான்
நீங்கள்
இப்போதும் அங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
எங்கள் வேலிகளுக்கு
உங்கள் ஓணான்
நீண்ட நெடும் காலமாய்
சாட்சி சொன்னபடியிருக்கிறது.
எங்கள் பயிர்களை
உங்கள் வேலி
நிரந்தரமாய் தின்று தீர்த்தபடியிருக்கிறது.
வேண்டாம்
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
எங்களுக்கு கொஞ்சம்
வியர்த்துக் கொட்டட்டும்
எங்கள் மண்ணோடு
சொந்த muscle கள் சின்னதாய்
மல்யுத்தம் செய்யட்டும்
எங்கள் அதிகாலையில்
சொட்டுப் பழஞ்சோறு மிஞ்சிக் கிடக்கட்டும்
எங்கள் குசினிகளில்
ரெண்டு உமி அடுப்பு
கிடந்து எரியட்டும்
என்னை உங்களுக்கு தெரியாது!
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
உங்கள் கழிவிரக்கத்தை
கபாலத்தில் ஏற்றி
நாங்கள் கவுண்டு படுத்திருக்கிறோம்
உங்கள் உண்டியல்களால்
நாங்கள் வண்டி பெருத்து நிற்கிறோம்
எங்கள் தவறணைகளில்
இப்போது ஆட்கள் இல்லை.
கள்ளு களர் மாறி
மேற்குத் தவறணை
வீட்டுக்குள் வந்து குந்தி இருக்குது.
கிழிஞ்சதை தைச்சுப் போட்ட
ஒரு சின்னச் சமூகத்தின்
கடைசிக் குழந்தை நான்
கிழிச்சிட்டுப் போட நன்றாய் பழகியிருக்கிறேன்
என்னை உங்களுக்கு தெரியாது!
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
உங்களுக்குத் தெரியாது
மாரீசனை மானென்று நம்பும்
சீதையர் கூட்டம் நாம்.
புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு
இப்போதும் இலக்குமணர்களை
ஓடவைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஒப்பிட்டுப் பார்க்க
கண்ணெதிரே நரகம் இல்லாததால்
இன்றுவரை சொர்க்கத்தை
அண்ணாந்து தேடிக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் பாண் கேட்டோம்
நீங்கள் கேக் கொடுக்கிறீர்கள்.
நாங்கள் பருக்கை கேட்டோம்
நீங்கள் பீட்சா தருகிறீர்கள்.
நாங்கள் தூண்டில் கேட்டோம்
நீங்கள் விளை மீன் அனுப்புகிறீர்கள்
நாங்கள் வாடகை வீடு கேட்டோம்
நீங்கள் மாளிகை கட்டித் தருகிறீர்கள்
நாங்கள் புளியோதரம் கேட்டோம்
நீங்கள் புரியாணிப் பார்சல் அனுப்புகிறீர்கள்
அடுத்த தெரு அக்காவுக்கு
அஞ்சு வந்ததென்றோம்
அடுத்த கிழமை நீங்கள்
அம்பது கொடுத்தீர்கள்
கேள்வி கூடக் கூட
நிரம்பல் கூடும் என்ற
பொருளியல் விதியை
இருவரும் தப்பாய் புரிந்து கொண்டோம்
ஆதலால்
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
புரிவதற்கு
மிகக் கடினமானவர்கள் நீங்கள்.
அரைக் கொல்லையில்
கழிப்பறை கட்டிய கோப்பாய் மண்ணில்
அற்ராச் பாத்றூம் வீடு.
பனிவிழும் மண்ணில்
நாலு வீட்டு வேலி பிரிச்சு
பந்தல் கட்டி சாமத்திய வீடு.
ஊர்ப் பற்றை அங்க காட்டி ஒரு பில்டப்
காசுக் கெத்தை இங்க காட்டி ஒரு செற்றப்.
கொளுத்தும் வெயிலில்
கோட் சூட் போட்ட
பெருங் கொண்டாட்டம் இங்க
கடுங் குளிர் வெளியில
வேட்டி சேலை கட்டிப்போட்டு
பெருத்த களியாட்டம் அங்க.
அஞ்சு ரூபா கீரைக் கட்டுக்கு
அம்பது ரூபாய் விசுக்கின நீங்கள்
அஞ்சாறு கிறடிட் காட்டுக்கு
உரிமையாளர் என்று எங்களுக்கு தெரியாததால்,
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
முற்றுப்பெறாத வரலாறு ஒன்றின்
முழுமுதல் காரணம் கேட்டு
முப்பத்து முக்கோடி தேவர்களும்
இப்போது
வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒற்றை வாயில் ஓராயிரம் புளுகுகளை சுமந்தபடிதான்
நீங்கள்
இப்போதும் அங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
இப்போது எங்கே நிற்கிறீர்களோ
நீங்கள்
அங்கேயே நில்லுங்கள்!
நிற்கும் இடத்தில்
இப்போது என்ன செய்கிறீர்களோ
அது அங்கேயே நிற்கட்டும்
என்னை உங்களுக்கு தெரியாது!
நான் கோப்பாய் குமார்
குப்பிளான் கணேஷ்
அளவெட்டி அன்ரனி
முளியவளை மனோகர்
நானாட்டான் பிரான்சீஸ்
சேனையூர் செல்வன்
வந்தாறுமூலை வரோதயன்.