மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தலைவர் நாமல் ராஜபக் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டணியின் பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அதனை நிர்மாணிப்பதற்கான அரசியல் குழுக்களுடன் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பேச்சுக்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் அதிகார தளம் வீழ்ச்சியடையாமல் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கும், எதிர்வரும் தேர்தலை திடமாக எதிர்கொள்வதற்கும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய கூட்டணியின் மூலம் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தை வழங்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.தடிகம பகுதியில் அண்மையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மகிந்த தரப்பில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன அரசியல்கள், இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.