மாகாண சபைத் தேர்தலைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தக் கூடாது-பஃப்ரல்
மாகாண சபைத் தேர்தலைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தக் கூடாது என்று, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை பஃப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் முறை மற்றும் சட்டங்களைத் திருத்துவதற்கு அனைத்து கட்சிகளினதும் கருத்துக்களைப் பெறுவதற்கான தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரதமரின் தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் அறிக்கையில் கையெழுத்திடாத நிலையில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கம் பாராட்டுக்குரியது என்று பஃப்ரல் குறிப்பிட்டுள்ளளது.
எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சில முன்மொழிவுகள் பிரதிநிதிகளின் ஜனநாயகத்தின் அடிப்படை சாரத்துக்கு எதிரானவை என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பான்மையைப் பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனங்களை வழங்குவது மற்றும் மேலெழுந்தவாரியான ஆசனங்களை அகற்றுவது உள்ளிட்ட சில முன்மொழிவுகளுக்கு உடன்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சி அதிகார சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த பஃப்ரல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு வழிவகுக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.