இங்கிலாந்தின் முக்கிய அமைச்சுப் பதவிகளில் வெள்ளையர் அல்லாதோர்!
Kumarathasan Karthigesu
வாக்காளரை கவருவதற்காக கறுப்பினத்தவருக்குப் பதவி.புயல் மழைக்குப் பின்னர் டவுணிங் வீதிக்கு வந்து கடமை ஏற்றார் லிஸ் ட்ரஸ்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் லிஸ் ட்ரஸ் (Liz Truss) அம்மையார், வெள்ளையர் அல்லாத வெளிநாட்டுப் பூர்வீகம் கொண்டவர்களைத் தனது அமைச்சரவையில் முக்கிய மூன்று அமைச்சுப் பொறுப்புகளில் நியமித்திருக்கிறார். நிதி, உள்துறை, வெளிவிவகாரம் போன்ற பிரதான அமைச்சுப் பொறுப்புகளே – வரலாற்றில் முதற் தடவையாக ஒரே சமயத்தில் – வெள்ளையர்கள் தவிர்ந்த கட்சிப் பிரபலங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவது கறுப்பின நிதி அமைச்சராக ஆபிரிக்காவின் கானா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராகிய குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) நியமிக்கப்பட்டுள்ளார். பொறிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் இந்தப் பொறுப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகிய ரிஷி சுனாக்கிடம் வழங்கப்பட்டிருந்தது. கட்சித் தலைமைக்கான தேர்தலில் அவருக்கும் லிஸ் ட்ரஸ் அம்மையாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வெளிவிவகார அமைச்சராக ஜேம்ஸ் கிளெவெலி (James Cleverly) நியமிக்கப்பட்டிருக்கிறார். சியாராலியோனைச் சேர்ந்த தாயாருக்கும் பிரிட்டிஷ் வெள்ளை இனத் தந்தைக்கும் பிறந்த ஆபிரிக்கக் கலப்பு இனத்தைச் சேர்ந்த அவர், கறுப்பின வாக்காளர்களைக் கவரும் நோக்குடன் அமைச்சுப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்று அவதானிகள் கருதுகின்றனர்.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளைக் கொண்டவராகிய முன்னாள் உள்துறை அமைச்சர் பிரிதீ பட்டீலின் இடத்துக்கு சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது தந்தையும் தாயும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கென்யா மற்றும் மொரீசியஸ் நாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களாவர்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சராகிய 47 வயதான லிஸ் ட்ரஸ் அம்மையார் பழமைவாதக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். நேற்று செவ்வாய்க் கிழமை அவர் மகாராணி எலிசபெத்தை நேரில் சந்தித்த பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். அங்கிருந்து அவர், டவுணிங் வீதியில் உள்ள “இலக்கம் 10” பிரதமர் அலுவலகத்துக்கு வாகன அணியுடன் வந்த போது கடும் புயல் மழை அடித்து ஓய்ந்திருந்தது. மகாராணியைச் சந்திப்பதற்காக அவர் சுமார் ஆயிரம் மைல்கள் தூரம் தாண்டி ஸ்கொட்லாந்து சென்று மீண்டும் லண்டனுக்குத் திரும்பியிருந்தார்.
நாட்டில் பண வீக்க வீதம் என்றும் இல்லாதவாறு இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கின்றது. எரிசக்திக் கட்டணங்கள் உச்ச அளவில் எகிறத் தொடங்கியுள்ளன. பெரும் நெருக்கடியான சூழலில் – பொருளாதாரப் புயலுக்கு மத்தியில் – பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றிருக்கிறார் லிஸ் ட்ரஸ்.
நாட்டைப் “புயலில்” இருந்து மீட்கப் போவதாக அவர் தனது முதலாவது உரையில் கூறியிருக்கிறார்.”இங்கிலாந்து இனி இயங்கத் தொடங்கும் “என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தின் வரலாற்றில் மார்க்கிரேட் தட்சர், தெரேசா மே ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றிருக்கிறார். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கைத் தோற்கடித்து 57.4 சதவீத வாக்குகளால் அவர் வெற்றியீட்டியுள்ளார். அவரது தலைமையில் கட்சி அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.தேர்தலை இலக்காகக் கொண்டு
பழமைவாதிகள் தங்களது கட்சிக்கு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களது ஆதரவைத் திரட்ட முற்படுவதையே அமைச்சரவை நியமனங்கள் காட்டுகின்றன.