புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் எவ்வித சலுகைகளும் இன்றி செயற்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் 20 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த போதுமானதாக இல்லை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.தம் கீழ் உள்ள 35 நிறுவனங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து நிறுவனங்களின் விவகாரங்களையும் தாம் மட்டும் கையாள்வது கடினம் என்றார்.

எனவே இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை அவர்களுக்கே வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் என மொத்தம் 88 பேர் அமைச்சர்களுக்கு உரிய சம்பளம் வழங்கியிருந்தனர் எனத் தெரிவித்த அவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு மேலதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.