பேரரசியின் மறைவு அறிவிப்பு. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மரணச் சடங்கு ஏற்பாடுகள், அரசராகின்றார் சார்ள்ஸ்.

Kumarathasan Karthigesu

பிரிட்டிஷ் பேரரசியார் இரண்டாவது எலிசபெத் மறைந்துவிட்டார். பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை இதனை அறிவித்துள்ளது. அரண்மனையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது. பொதுமக்கள் அரண்மனை முன்பாகத் திரளத் தொடங்கியுள்ளனர். மகாராணியின் மறைவை அடுத்து அவரது புதல்வராகிய இளவரசர் சார்ள்ஸ் அரசராகப் (King) பதவியேற்கின்றார். அவர் சிறிது நேரத்தில் நாட்டுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

21 ஏப்ரல் 1926 இல் பிறந்த எலிசபெத் மகாராணி, பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் மிக நீண்ட காலம் அரச சேவைப் பதவியை வகித்தவர் ஆவார்.

பிரதமர் லிஸ் ட்ரஸ் டவுணிங் வீதி அலுவலகத்தின் முன்பாக இன்று முன்னிரவு மகாராணியின் மறைவுச் செய்தியை நாட்டுக்கு அறிவித்தார்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களது மரணங்களை அறிவிப்பதும் மரணச் சடங்குகளை எவ்வாறு நடத்துவது என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே – முன்கூட்டியே- திட்டமிடப்பட்டு விடுகின்றன.அவற்றுக்குச் சில முக்கிய பாலங்களின் குறியீட்டுப் பெயர்களும் சூட்டப்படுகின்றன. அந்த வகையில் மகாராணியின் மரணச் சடங்குகள் “Operation London Bridge” என்ற பெயரில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது. அதன் விவரங்கள் அண்மையில் வெளியாகி இருந்தன.

கடந்த ஆண்டு காலமாகிய மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் மரணச்சடங்கு நடைமுறைகள்“Operation Forth Bridge” என்ற குறியீட்டுப்பெயரால் அழைக்கப்பட்டன.தேசிய துக்கமும் இறுதி நிகழ்வுகளும் Operation Forth Bridge என்ற தலைப்பின் கீழேயே இடம்பெற்றன. Forth Bridge என்பது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ரயில் பாலத்தின் பெயர்.

உலகெங்கும் பல பில்லியன் மக்களால் விரும்பப்படுகின்றவரான எலிசபெத் மகாராணி தனது நான்கு பிள்ளைகள் எட்டுப் பேரப்பிள்ளைகள் மற்றும் 14 பூட்டப்பிள்ளைகளை விட்டுப் பிரிந்துள்ளார்.

மகாராணியின் கணவர் கோமகன் பிலிப் 17 மாதங்களுக்கு முன்பாக கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமாகியிருந்தார்.

மகாராணியின் மறைவை அடுத்து அரச குடும்பத்தினர் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். ஐக்கிய ராஜ்ஜியத்தின் மிகவும் துயர் தோய்ந்த நாள் இது என்று இன்றைய தினத்தை செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அறிவிக்கப்படவுள்ளது.