ஐ.நாவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது, அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு
- வீடியோ இணைப்பு -
யுத்தக் குறற்சாட்டு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட எந்தவொரு இணக்கப்பாட்டையும் செயற்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு முரணானது என, தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதற்தடவையாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்பதற்காக செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சர்வதேசத்துடன் மிகவும் நற்பெயருடன் செயற்படும் நாடு. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து நாம் அவ்வாறே செயற்படுகின்றோம். நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடன் சவால்களுடன் அல்லது எதிர்ப்புடன் செயற்பட விரும்பவில்லை. அவர்களுடன் கலந்துரையாடி பேச்சுசார்த் ஊடாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றோம். எனினும் அனைத்து விடயங்களும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு அமையவே செயற்பட முடியும்.
இந்த நாட்டின் யாப்பை மீறி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நாம் தயார் இல்லை. அவ்வாறான ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை. அவ்வாறு செயற்படுவதற்கு மக்கள் எமக்கு அதிகாரத்தை தரவும் இல்லை. எந்தவொரு பொறிமுறையும் இந்த நாட்டின் யாப்பிற்கு அமையவே செயற்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்றதிகாரம், அரசியல் அமைப்புச் சபை மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று துறைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நீதி மன்றமே வழக்குகைளை நடத்துவது குறித்து தீர்மானிக்கின்றது. அதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. வழக்குகளை நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக வழக்குகளை விசாரணை செய்ய முடியும். அதற்கமையவே செயற்பட முடியும். இந்த நாட்டின் வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை செயற்படுத்த எதிர்பார்கின்றோம். என்றார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஜெனீவா பயணமாகியுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்தவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.