மின் வெட்டைத் தவிர்க்க அணு உலைகள் அனைத்தையும் இயக்க முடிவு!
எரிவாயுக் குழாய் திருத்தம் மேலும் நீடிக்கிறது ரஷ்யா!! Kumarathasan Karthigesu
பிரான்ஸ் அரசு நாட்டில் உள்ள சகல அணு மின் ஆலைகளையும் குளிர் காலத்தில் மீளத் திறந்து இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளது. குளிர் காலத்தில் எரிசக்திப் பாவனை உச்ச அளவை எட்டும் என்பதால் மின் வெட்டுப் போன்ற கட்டுப்பாடுகளை அமுல் செய்வதைத் தவிர்ப்பதற்காகவே மூடிக் கிடக்கின்ற அணு மின் ஆலைகளைத் திறந்து இயக்குவதற்கு நாட்டின் மின் மற்றும் எரிவாயு நிறுவனத்துக்கு (EDF) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை அடுத்து நாட்டில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி தொடர்பாக விவாதிப்பதற்காக அதிபர் மக்ரோன் இன்று பாதுகாப்புச் சபையைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்திப் பரிமாற்ற அமைச்சர் அனேயஸ் பன்னியர் ருனாச்சர் (Agnès Pannier-Runacher), அணு ஆலைகளை இயக்குவது என்ற தகவலை வெளியிட்டார்.
பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் அதிகமாகத் தனது மொத்த மின் தேவையில் 67 வீதத்தை அணு உலைகள் மூலமே பெற்றுக் கொள்கிறது. சுமார் ஏழு வீதத்தை மட்டுமே எரிவாயு மூலம் பெறுகிறது. நாட்டில் உள்ள மொத்தம் 56 அணு ஆலைகளில் 32 தற்சமயம் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் கருதி மூடப்பட்டிருக்கின்ற அந்த அணு ஆலைகளையே மீளத் திறந்து மின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில் மோசமான எரிசக்தி நெருக்கடிக்கு வாய்ப்புள்ளது என்றும் வீடுகளுக்கு இரண்டு மணி நேர மின் வெட்டை அமுல் செய்யவேண்டிய நிலைமை கூட உருவாகலாம் என்றும் பிரதமர் எலிசபெத் போர்ன் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.
மின்சாரம் மற்றும் எரிவாயுவை நிதானமாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் அவரது அரசு சகல தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமாகிய “காஸ்ப்ரோம்” (Gazprom) ஜேர்மனி ஊடாக ஐரோப்பாவுக்கு எரிவாயுவை விநியோகிக்கின்ற Nord Stream 1 குழாயைத் திருத்த வேலைகளுக்காக மூடியிருக்கிறது.
முன்னர் அறிவிக்கப்பட்டபடி நாளை சனிக்கிழமையுடன் திருத்த வேலை முடிவடைய மாட்டாது என்றும் குழாயில் எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் திருத்தப் பணிகள் மேலும் நீடிக்கும் எனவும் காஸ்ப்ரோம் அறிவித்துள்ளது. அதனால் ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.