துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவருக்கு மக்ரோன் விடுத்த விழிப்புணர்வுச் செய்தி.

Kumarathasan Karthigesu

பிரான்ஸில் சகல தரங்களையும் சேர்ந்த பல மில்லியன் மாணவர்கள் புதிய கல்வி ஆண்டுக்காக இன்று பாடசாலைகளுக்குத் திரும்பி உள்ளனர்.

மாணவர்கள் பள்ளி திரும்புவது தொடர்பாக அதிபர் மக்ரோன் விடுத்துள்ள ஒரு ரிக்ரொக் (TikTok) வீடியோவில், பாடசாலைத் துன்புறுத்தல்கள்(school bullying) குறித்து விழிப்பூட்டியிருக்கிறார். பாடசாலைச் சூழலிலும் வகுப்பறைகளிலும் மாணவர்களை உடல், உள ரீதியாகத் துன்புறுத்துகின்ற சம்பவங்கள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.வகுப்பறைகளில் தொடங்கும் துன்புறுத்தல்கள் பின்னர் வீடு திரும்பிய பிறகும் சமூக இணைய ஊடகங்கள் (social networks) வழியாகத் தொடர்கின்றன.

இதனால் பல மாணவர்கள் மனமுடைந்து தனிமைப்பட்டு உயிரை மாய்த்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடசாலைக்கு மகிழ்ச்சி இல்லாமல் செல்லும் நிலை உருவாகுவதை அனுமதிக்க முடியாது என்று மக்ரோன் தனது செய்தியில் கூறுகிறார்.

“நீங்கள் எவரும் தனித்து இல்லை. உங்களைச் சூழப் பலர் இருக்கிறார்கள். எந்தவித துன்புறுத்தல்கள் பற்றியும் பெற்றோரிடமோ ஆசிரியர்களிடம் பேசுங்கள். வெளிப்படுத்துங்கள். சிக்கல் உங்களுடையது அல்ல. அது உங்களைத் துன்புறுத்துபவர்களது பிரச்சினை. தயங்காமல் அதனை அடுத்தவரிடம் வெளிப்படுத்துங்கள். அவமானங்கள், அச்சுறுத்தல்கள் வேறு எவருக்கு நேர்ந்தாலும் அதை மறைக்காதீர்கள் “-இவ்வாறு அதிபர் மக்ரோன் மாணவர்களுக்குக் கூறியிருக்கிறார்.

பாடசாலைத் துன்புறுத்தல்கள் (school bullying) பற்றி முறைப்பாடு செய்வதற்காக 3018 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்துத் தகவல் தெரிவிக்க முடியும் என்பதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

பாடசாலைகள், கல்லூரிகள், உயர்தர பாடசாலைகள் உட்பட சகல தரங்களையும் சேர்ந்த 13 மில்லியன் மாணவர்கள் இன்று புதிய கல்வி ஆண்டுக்கான முதல் நாளில் கல்விச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறைதான் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி மாணவர்கள் வகுப்பறை செல்கின்றனர்.