ஆலங்கட்டி மழையின் அதிரடிப் பொழிவால் ஸ்பெயினில் 50 பேர் காயம்! குழந்தை மரணம்!!
Kumarathasan Karthigesu
ஸ்பெயினில் கடும் வெப்பம், காட்டுத்தீ என்பவற்றைத் தொடர்ந்து சில பகுதிகளில் சடுதியான ஆலங்கட்டி(hailstones) மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
கட்டலோனியாவில் சில பகுதிகளைக் கடும் காற்றுடன் தாக்கிய ஆலங்கட்டி மழையினால் சுமார் ஐம்பது பேர் காயமடைந்துள்ளனர். குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்த பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கட்டலோனியாவில் La Bisbal de l’Emporda,என்ற நகரத்தைத் திடீரெனக் கடும் காற்றுடன் தாக்கிய மழையின் போது ரெனிஸ் பந்தின் அளவில்-சுமார் நான்கு சென்ரி மீற்றர் விட்டளவு கொண்ட – ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் பலர் காயமடைந்தனர். ஆலங்கட்டியின் நேரடியான தாக்குதலுக்கு இலக்கான ஒன்றரை வயதுப் பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது என்ற துயரச் செய்தி அங்கு சமூக ஊடகத் தளங்களில் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த இயற்கை அனர்த்தத்தில் காயமடைந்த குழந்தை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிலையில் தலையில் ஏற்பட்ட கடும் காயம் காரணமாக அடுத்த நாள் உயிரிழந்தது என்ற தகவலை
உள்ளூர்ப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.சுமார் பத்து நிமிடங்களுக்கு அதிரடியாகப் பொழிந்து தள்ளிய ஆலங்கட்டிகள் தாக்கியதில் நகரசபைக் கட்டடம் உட்பட பல கட்டடங்களின் கூரைகளும் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
பெரும் ஓசையுடன் கற்கள் வீழ்வது கண்டு பலரும் பதறி ஓடுகின்ற காட்சிகளும் கார்க் கண்ணாடிகளை ஆலங்கட்டிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. கட்டலோனியாவில் (Catalonia) கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பொழிந்த ஆலங்கட்டி மழைகளில் அளவில் பெரிய கட்டிகள் அவை என்று நாட்டின் வானிலை அவதான நிலையம் (Météocat) தெரிவித்துள்ளது. இயற்கையின் இந்த சீற்றத்தைப் பெரும் துயரச் சம்பவம் என்று கட்டலோனியா அதிபர் Pere Aragones வர்ணித்துள்ளார்.
ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளை மேலும் இது போன்ற ஆலங்கட்டி மழை தாக்கக் கூடும் என்று பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த சில வாரங்களாக நீடித்த வெப்ப அனலைத் தொடர்ந்து இப்போது திடீரெனப் புயல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. திடீர் திடீரென ஆலங்கட்டி மழைப் பொழிவுகளும் பதிவாகி வருகின்றன.