ஆயுதப்படைகளை எச்சரித்த சரத் பொன்சேகா
பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இலங்கை ஆயுதப் படைகளின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ள, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி எவ்வாறெனினும், இராணுவத்திற்கான வரப்பிரசாதங்களை குறைக்க வேண்டானெ இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.நாளை இது உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். என்னுடைய செயலாளராக பணியாற்றுபவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அவருக்கு அவரது ஓய்வூதியம் உட்பட சுமார் ஓன்றரை இலட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். சிறிய காரில் பயணம் செய்த அவர், இப்போது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வருகிறார். ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களும் இவ்வாறு விரைவில் இவ்வாறான நிலைமைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். என்றார்
அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் தொடர்ந்து ஊழலில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டிய சரத் பொன்சேகா, நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான 150 கோடி ரூபாய் ஒப்பந்தம் விலை மனுக்கோரல் நடைமுறைகளை மீறி கையெழுத்திடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.