பலவந்தப்படுத்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பலருக்கு தடை’ நியாயம் வேண்டும் என்கிறார் ஹக்கீம் எம்.பி

அதிகாரிகளால் பலவந்தப்படுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பல தனிநபர்கள், இலங்கை அரசாங்கத்தினால் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல தனிநபர்களில் அப்பாவி மாணவர்களு உள்ளடங்குவதாகவும், அவர்கள் அச்சுறுத்தலால் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலம் குறித்த முதல்நாள் விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிநபர்கள் 156 மற்றும் 6 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக  வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. நான் அனைத்து அமைப்புகள் குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தடை செய்யப்பட்ட பல அமைப்புகள் இப்போது செயற்பாட்டில் இல்லை. அதுத் தொடர்பில் எமக்குப் பிரச்சினை இல்லை. எனினும் தடை செய்யப்பட்ட தனிநபர்களின் பட்டியலில் அப்பாவி மாணவர்கள், மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்த தடை சாட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இதுத் தொடர்பில் நீதி அமைச்சருடன் நான் பேசினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நீதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இணைந்து மீண்டும் இதுத்  தொடர்பில் ஆராய வேண்டும். காரணம் இங்கு அநியாயம் இடம்பெற்றுள்ளது. பயங்கரவதத விசாரணைப் பிரிவினர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர். தாம் வாக்குமூலம் வழங்குமாறு சந்தேகநபர்களை கட்டாயப்படுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அந்த அதிகாரிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆகவே இதுத் தொடர்பில் மீள ஆராயுமாறு நான் கோரிக்கை விடுப்பதோடு, அப்பாவிகளை இந்த பட்டியலில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். என்றார்

அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க இந்த விடயத்துடன் தொடர்புடைய அனைவரும் முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.