இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை: ஜனாதிபதி வழங்கிய தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை வரலாற்றில் இந்த உடன்படிக்கை ஒரு முக்கியமான படியாகும் எனவும், வங்குரோத்து நிலை மற்றும் கடனை செலுத்துவதில் உள்ள சிரமம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க ‘இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான படி. முதல் முறையாக திவால்நிலையை அறிவித்துள்ளோம்.
தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு இன்றியமையாத காரணம். திவால்நிலையிலிருந்து விடுபடுவது மற்றும் சிரமத்திலிருந்து விடுபடுவதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் மிகவும் போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்பதோடு, சமூக நிலைமைகளை உயர்த்துவதும் தமது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
ஆரம்பமே கடினமாக இருக்கும். எனினும் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை தான் அறிவதாகவும், நமது சமூக சேவைப் பணிகளை எளிதாகச் செய்யக்கூடிய வகையில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று முழு நாட்டையும் கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.