யுவதி ஒருவரை பொலிஸார் நடத்திய விதம் குறித்து கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது
பல்கலைக்கழக மாணவி ஒருவரை கைது செய்ய முயன்ற பொலிஸார் அவரை நிர்வாணப்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும், உரிமைக்காக போராடுபவர்களை பொலிஸார் இவ்வாறு நடத்த முடியுமா எனவும், கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
VISUAL; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உள்ளிட்ட மூவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் உத்தரவை மீறிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது யுவதி ஒருவரை பொலிஸார் மிகமோசமாக நடத்தியதாக, கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் இந்த நாட்டின் இளைஞர் யுவதிகள் மீது பொலிஸார் மோசமாக தாக்கினர். இதனை எவரும் அனுமதிக்கமாட்டார்கள். பல்கலைக்கழக யுவதி ஒருவரை நிர்வாணமாக்க மேற்கொண்ட முயற்சியை நாம் அவதானித்தோம். போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஒரு பெண்ணை இப்படி செய்வதா? பெண் பொலிஸ் அதிகாரிகள் தமது சகோதரிகளுக்கு இவ்வாறு செய்வார்களா? இந்த பொலிஸ் அதிகாரிகளுக்காகவுமே இந்தப் பெண் போராடினார். இந்த நாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் பசியுடன் இருக்கின்றார்கள் அவர்கள் சார்பிலேயே அவர் போராடினார். பொலிஸார் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்
எவ்வாறெனினும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.