கவிஞர் அஹ்னாப் ஜசீன் ஜாமீனின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசால் அண்மையில் பட்டியலிடப்பட்ட இளம் கவிஞரின் பிணை நிபந்தனைகளை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட 2291/02 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 15 தனிநபர்களும் 316 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
மன்னாரமுது அஹ்னாஃப் என்ற பெயரில் தமிழ் வாசகர்களிடையே நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் உட்பட 55 பேர் மற்றும் 3 அமைப்புக்கள் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன.
கவிதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜசீமின் பிணை நிபந்தனைகளை புத்தளம் மேல் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அஹ்னாப் ஜசீமை தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் புத்தளம் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டுமென 2021 டிசம்பர் 15 ஆம் திகதி மற்றுமொரு உத்தரவை பிறப்பித்தார்.
எனினும் அஹ்னாப் ஜசீம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் மன்னார் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டுமென நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னைய உத்தரவிற்கு அமைய அஹ்னாப் ஜசீம், 2021 டிசம்பர் 15 முதல் எட்டு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
2017 ஆம் ஆண்டு நவரசம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியதாகவும், தனது மாணவர்களை ‘தீவிரவாத சித்தாந்தங்களைப்’ பின்பற்றுபவர்களாக கற்பிக்க முயன்றதாகவும் கூறி அஹ்னாஃப் ஜசீம், 16 மே 2020 அன்று பண்டாரவெளியில் உள்ள அவரது வீட்டில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினால் (CTID) கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 2021ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், அவர் 2021 டிசம்பர் 16ஆம் திகதி கொழும்பு விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.