சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHRC அலுவலகம் முன்பாகவே இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போரணியாகச் சென்று கத்தோலிக்க மதகுரு டன்ஸ்டன் பிரட்ரிகிடம் மஹஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியான் தேவி, நாளுக்கு நாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாற்றமடைந்து வரும் இந்த நாட்டில் யாரிடம் சென்று தமது குறை குற்றங்களை முறையிடுவது என கேள்வி எழுப்பினர்.

மேலும் தொடர்ச்சியாக 14 வருடங்களாக தாம் தமது உறவுகளை தேடிவருவதாக தெரிவித்த அவர், சர்வதேசம் தலையிட்டு தமது சொந்தங்களுக்கான முடிவை எடுத்துத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மன்னாரிலும்  இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் மன்னாரில் இந்த அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடன் இணைந்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பஜார் பகுதியூடாக மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் சிவில் சமூக அமைப்பினர் பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.