அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தலைநகரில் இன்று போராட்டத்தை நடத்தி இந்த அழைப்பை விடுத்துள்ளது.
அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தவை பதவி நீக்கக் கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த இரண்டரை வருடங்களாக இந்த ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் எழுத்துமூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.
தலைவர் பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்து இலஞ்சம் கொடுத்து பொது முகாமையாளருக்கு சுமார் 500 இலட்சம் ரூபா பெறுமதியான காரை 6 இலட்சம் ரூபாவிற்கு வழங்கியதை கணக்காய்வாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் குற்றங்களை எதிர்த்தமையால் ஆத்திரமடைந்த தலைவர், கிளைச் சங்கத்துடன் வெறுப்புடன் செயல்படுவதோடு, வங்கியின் அமைப்பு முறையை அழிப்பதன் மூலம் கீழ்த்தரமான பழிவாங்கல்களை முன்னெடுப்பதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களிடையே மாத்திரம் பகிரப்பட்ட பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், இலங்கை வங்கியை காப்பாற்றும் வகையில் ஊழல் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.
குறித்த தலைவரை பதவி நீக்கம் செய்து பதிய தலைவர் நியமிக்கப்படும்வரை இந்த போராட்டம் தொடருமெனவும், இந்த கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தற்பேதாதைய அரசாங்கத்திற்கு காணப்படுவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.