தொலவத்தவின் LGBTIQ+ திருத்தம் ‘அடக்குமுறைக்கான வெள்ளையடிப்பு’

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் அடக்குமுறை நடைமுறைக்கு முற்போக்கான முகத்தை வழங்கும் நோக்கில் ஓரினச் சேர்க்கையாளர் உள்ளிட்டவர்களை உள்ளடக்கிய LGBTIQ+  சமூகத்தை துஷ்பிரயோகம் செய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்களுக்கிடையில் ஒருமித்த பாலுறவுகளை குற்றவியல் குற்றமாக கருதாமல் இருப்பதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரேரணையை கடந்த 24ஆம் திகதி அரசாங்க உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதற்கு பதிலளிக்கும் இலங்கை LGBTIQ+ சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்த பிரேரணை வெறும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடைமுறைக்கு வெள்ளையடிக்கும் முயற்சியா என்ற சந்தேகம் எழுவதையே காட்டுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அவசரகாலச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கைது செய்து தடுத்து வைப்பதை அரசாங்கம் கவனமாக நடைமுறைப்படுத்தி வருவதாக அந்த சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது சமூகத்தைச் சேர்ந்த பலர் தன்னிச்சையான விசாரணைகள், கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களை எதிர்கொண்டு பாதுகாப்பு அச்சம் காரணமாக, தலைமறைவாகியுள்ளதாக  LGBTIQ+ சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தாராளவாத விழுமியங்களை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதற்காக இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் அரசாங்கம், குற்றவியல் சட்டத்தில் தேடுதல், கைது செய்தல் மற்றும் தடுத்து வைக்கும் அதிகாரங்களை உள்ளடக்கிய  பல புதிய குற்றச் செயல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறித்த சமூக உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உரிய திருத்தங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படாவிட்டால் அரசாங்க உறுப்பினர் தொலவத்தவின் நேர்மை தொடர்பில் கேள்விகள் எழும் எனவும் LGBTIQ+ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.