இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச படகு சேவை இவ்வாண்டு ஆரம்பம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச படகு சேவை இந்தாண்டு தொடங்க எதிர்பார்ப்பதாக புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை இந்த ஆண்டு தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி, சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு சென்னை துறைமுக அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி துறைமுகத்தில் வணிக சரக்கு கையாளும் பணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய பிற செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.