இரண்டு எரிவாயுக்களின் விலைகளும் ஒரே மாதிரி அமைய வேண்டும்
பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையில் விற்பனை செய்யப்படும் இரண்டு வகையான சமையல் எரிவாயுக்களின் விலைகளும் சமமானதாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே வகையான எரிவாயுக்களே இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், பெயர்களில் காணப்படும் வித்தியாசத்திற்காக ஒன்றின் விலையை மாத்திரம் அதிகரித்து விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
லிட்ரோ நிறுவனம் 4,666 ரூபாய்க்கு எரிவாயுவை விற்பனை செய்கையில் லாப்ஸ் நிறுவனம் எவ்வாறு ஐயாயிரம் ரூபாய்கு மேல் எரிவாயுவை விற்பனை செய்ய முடியும். ஆகவே லாப்ஸ் ஊடாக சமையல் செய்கையில் சில சேர்மானங்களை சேர்க்க வேண்டியதில்லையா? சுவையை கூட்முவதற்கு ஏதாவது விசேட தன்மைகள் லாப்ஸ் எரிவாயுவில் காணப்படுகின்றதா? ஆகவே ஒரே வகையான எரிவாயு ஏன் இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இது கறுப்பு சந்தை மாபியா, லிட்ரோ எரிவாயுவின் விலைகக்கு சமமாக லாப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட வேண்டும். இதுத் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையில் முறையிடவுள்ளோம். கறுப்பு சந்தை மாபியா, நிறுவன மாபியா ஆகியவற்றுக்கு எதிராக மக்களுக்காக நாம் முன்னிற்போம்.
இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 5,800 ரூபாயாக காணப்படுகின்ற அதேவேளை, லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4,664 ரூபாயாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.