ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்ட திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர் கல்வித் துறை இராணுவ மயமாக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட திருத்த யோசனை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப் படவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பில் பொதுவாகப் பின்பற்றப் படும் நடை முறைகளுக்கு முரணாகத் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப் பட்டால், அது இலவசக் கல்வியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் எதிர் காலத்தையும் பாதிக்கும் என அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள், தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.