அணுவாயுத ஆலையை ரஷ்யா கைப்பற்றியது: அமெரிக்க அச்சம்
உக்ரேனில் உள்ள ஓர் அணுவாயுத ஆலையை ரஷ்யா கைப்பற்றியிருப்பதையடுத்து அமெரிக்கா அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆலையை ஒரு தளமாகப் பயன்படுத்தி உக்ரேனியர்களை ரஷ்யா தாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அணுவாயுத மாசுபாட்டைத் தவிர்க்க உக்ரேன் எந்தப் பதிலடியும் கொடுக்காது என்பது ரஷ்யாவுக்குத் தெரியும் என பிளிங்கன் தெரிவித்துள்ளார். அவர் ஈரான், வட கொரியா பற்றியும் குறைகூறினார். அணுவாயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும் சந்திப்பில் பிளிங்கன் கலந்துகொண்டு பேசினார்.
அந்தச் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா கட்டுப்பட்டு நடப்பதாக அவர் உறுதியாகக் கூறினார்.அணுவாயுதப் போரில் யாரும் வெற்றிபெற முடியாது என்றும் அத்தகைய போர் இடம்பெறவே கூடாது என்றும் கூட்டத்தினருக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.