சபையை உறைய வைத்த காத்தாயி நாடகம்

- மாதவி சிவலீலன் -

11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது யார் இந்தக் காத்தாயி என்கின்ற கேள்வி எனக்குள்ளேயிருந்தது. மு. நித்தி சேருடன் உரையாடும் போது அத்தாய் பற்றிய செய்தியைக் கூறியிருந்தார்.

1994 ஆம் ஆண்டு மலையகத்தில் தன்னைத் தேடி வந்த போராளி இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்தொன்பது வருடங்கள் அச்சிறையில் நோய்களோடு இருந்து அங்கேயே மரணித்துப் போனார். அவருக்காக எவருமே குரல் கொடுக்கவும் இல்லை. அச்சம் காரணமாக அவரது புகைப்படங்களையும் உறவினர்கள் எரித்து விட்டனர். இன்று அவரைப் பார்த்தவர்கள் பழகியவர்கள் நினைவிலேயே அவரது உருவம் நினைவு கூரப்படுகின்றது.

மாநாட்டு நிகழ்வுகளின் இடையில் மதிய உணவிற்கு முன்பாக நாடகத்திற்காகப் பார்வையாளர்கள் பசி மறந்து தம்மைத் தயார்ப்படுத்தி அமர்ந்து கொண்டனர். நாடகம் பார்க்கும் குதூகலம் சிரிப்பாகவும் சிறு சிறு உரையாடல்களாகவும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென அதட்டலான குரலில் சாமும் சுஜீத்தும் சபையின் சிரிப்பைக் குதூகலத்தை அலட்சியத்தைக் கட்டுப்படுத்தினர், மனம் ஒப்பாத இறுக்கமான இராணுவ சூழலுக்குள் அகப்பட்ட உணர்வைத் தூண்டிச் சபை அடங்கிக் கிடந்தது. கைகளில் கொளுத்திய சாம்பிராணிக்குச்சுகள் திணிக்கப்பட்டன. அன்று அத்தாய்க்கு நடந்த கொடூரத்தைத் தட்டிக் கேட்காத சமூகத்தை முன்னிறுத்தியதாக வாயைக் கட்டிக் கொள்ள கறுப்புத்துணி கொடுக்கப்பட்டது. வாய் மூடிச் சபை மயான அமைதியாகியது.

மெல்லப் படர்ந்த சாம்பிராணிப் புகை மரண நிகழ்வொன்றை உருவாக்கச் சுவாசிக்க முடியாமலும் சிலர் திணறச் சூழல் அபத்தமாகியது. அப்போது காத்தாயி உடல் வெள்ளைத் துணியால் மூடி நால்வரால் கொண்டுவரப்பட் டுக் கிடத்தப்பட்டது. அக்காட்சி மனதைக் குமுற வைக்க, அத்தாயின் கதை பின்னோக்கிய நினைவாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

வதைமுகாமில் அடிகளுக்குள்ளும் வசைகளுக்குள்ளும் திணறும் காத்தாயியாக ரஜித்தா ஈனக்குரல் எடுத்துப் பேசினார். இல்லை, அப்பாத்திரமாகவே மாறித் திணறத் தொடங்கினார். சாம் கொடூர இராணுவ அதிகாரியாக விளங்கிக் கர்ச்சிக்கும் குரல் சபையை அச்சமூட்டியது. இடையிடையே ‘அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது; அவரை விட்டு விடுங்கள்’ என அத்தாயின் வீட்டில் தங்கிய வரதனின் வாக்குமூலமாக சுஜித் குரல் கொடுத்தார். இராணுவ அட்டூழியத்துக்குள் அவை எடுபடாமல் போயிற்று. கறுத்த உடையில் இருண்ட சூழலைப் பிரதிபலித்த நான்கு சிறுவர்களும் தங்களுடைய பங்களிப்பை அழகாக வழங்கியிருந்தனர்.

ஈழத்து விடுதலைப் போராட்டத்தில் தெரிந்தும் தெரியாமலும் போராளிகளைத் தாய்ப் பாசத்துடன் அரவணைத்த காரணத்தால் வீடுகளிலும் வீதிகளிலும் வதை முகாம்களிலும் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அனைத்துத் தாய்மார்களின் பிரதிநிதியாகக் காத்தாயித் தாய், அன்று கண்களில் கண்ணீரை வர வைத்தார்.

பாரதிதாசன் ‘எது கலை’ எனும் கவிதையைப் பின்வருமாறு முடிப்பார்.

’’என்நண்பர் பகவதியாம் நடிகர் ஓர்நாள்

எழிலுறும் நாடக அரங்கை அடைந்தார் ஆங்கே

என்நண்பர் அடையாளம் மறந்தேனி ல்லை

இடர்சூழ்ந்தனை நோக்கி அறம் விளக்கும்

சொன்மழையைச் சினங்கூட்டி, மெய்ப்பாடேற்றித்

தொடங்கினார்; விழிப்புற்ற ஏழைத்தோழன்

தனைக் கண்டேன் பகவதியை மறந்தேன்மறக்க

வைத்த தெது? அதுதான் கலையாம் அன்றோ!’’

இக்கவிதை வரியை ரஜித்தா, சாம் நடிப்பில் நான் கண்டேன். அவர்கள் இருவரும் பாத்திரங்களுக்குள் ஒன்றிப் போயினர். சாம், வரதனைத் தெரியுமென ஒத்துக் கொள் என்று ஒவ்வொரு தடவையும் அதட்டும் போதும் அடிக்கும் போதும் ரஜித்தா கெஞ்சுவதும் கலங்குவதும் பதட்டமடைவதும் அழுவதும் ஆதங்கப்படுவதும் நிலைதடுமாறி விழுவதும் ஜீரணிக்க முடியாத துன்பியல் நிகழ்வாக அமைந்தது. உண்மையில் ஒருகணம் அந்த இராணுவ அதிகாரியின் பொல்லைப் பறித்து அவருக்கு விளாச வேண்டுமென என் கால்கள் முன்னோக்கி நகர எத்தனித்தன.

மலையக் மண்ணில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்த அத்தாயிற்காக எவரும் அன்று ஆதரவு கொடுக்கவில்லை. உதவி செய்யவும் இல்லை. யாருமற்ற அனாதையாக உலகில் மறக்கப்பட்ட ஜீவனாக சிறைக்குள் பத்தொன்பது வருடங்கள் வாழ்ந்து புற்று நோயோடும் படுக்கைப் புண்ணோடும் அவதியுற்று மடிந்த அவரின் வாழ்க்கை மறக்கடிக்கப்பட்ட சூழலில் இலண்டனில் அவருக்கு இவர்களால் உயிர் கொடுக்கப்பட்டு அவருக்கு நடந்த அநீதி உலகறியச் செய்யப்பட்டுள்ளது. பேசாப் பொருளைப் பேச வைத்த விம்பம் குழுவினர் வரலாற்றில் நின்று விட்டனர்.

நாடகத்தின் நிறைவுப் பகுதியில் சபையே கலங்கி நின்றது. யாவரும் எழுந்து நின்று கரங்களைத் தட்டிக் கலைஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவித் ததுடன் அத்தாயிற்கும் மரியாதை செலுத்தினர். பலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. ஓவியர் ராஜா பெரிதாக அழுதே விட்டார். பின்னணி இசை, உடையலங்காரம், காட்சியமைப்பு யாவுமே உணர்வுபூர்வமாக இருந்து அக்கொடூர சூழலையும் சோகத்தையும் ஏற்படுத்தின.

வலி தரும் படைப்பைத் தரமான படைப்பாகத் தந்த சாம், ரஜித்தா இருவருக்கும் அவர்களோடு தோள் நின்று உழைத்த சுஜித், காண்டீபன், அலன், றித்திக், அனுக்ஷன்,அஞ்சனா, ஷாருகா, றாஜீ, மோதிலா ஆகியோருக்கும் பாராட்டுதல்களும் நன்றியும்.