மரங்களின் நிலவளாவிய வலைப்பின்னல்களும் தொலைதொடர்புகளும்.

- கௌரி பரா -

சில நேரங்களில் வீட்டுத்தோட்டம் செய்வதற்கு மண்ணை கொத்திப் புரட்டும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் பட்டு நூல்போன்ற ஒன்றினால் ஆன நெருக்கமான வலைப்பின்னல்கள் மண்ணை கெட்டியாக கவ்விப்பிடித்திருப்பது எனது கண்களில் தென்பட்டிருக்கின்றன, அப்பொதெல்லாம் அவை என்ன என்ற கேள்வி மனதில் எழும், ஏனெனில் பக்கத்தில் மரங்களோ தாவரங்களோ புற்களோ இல்லாத பட்சத்தில் வெறுமனே வேரினால் ஆன வலைப்பின்னல் மட்டும் எங்கிருந்து வந்திருக்க்கூடும் என்பதே கேள்வியாக இருந்தது.

இந்த வலைப்பின்னல்கள் என்ன என்பதற்கான விடையை எதேச்சையாக 2021 ல் வெளிவந்த “Entangled Life “சிக்குண்ட வாழ்வு“ என்ற புத்தகத்தை வாசித்த போது அறிய முடிந்தது.

நிலத்திற்கு கீழ் நிலவளாவிய “Mycorrhiza” மைக்கோறைஸா என்ற என்ற ஃபங்கி வேர்களினால் ஆன வலைப்பின்னல் இருக்கிறது என்றும் மேலும் ஃபங்கி என்றழைக்கப்படும் வெற்றுக்கண்களுக்கு புலப்படாத இந்த நுண்ணுயிர்கள் உலகில் படைத்தல் , காத்தல் மற்றும் அழித்தல் என்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் எப்படி உறுதுணையாக இருக்கின்றது எனவும் விளக்கியது.

மரங்களைப்பற்றியும் உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை மனிதர்கள் கற்றறிந்த வலியன பிழைக்கும் என்ற கோட்பாட்டை இந்த புத்தகம் அடியோடு அடித்து நொருக்கி மீள்விசாரணைக்குள்ளாக்குகிறது.

ஆகவே அந்தப்புத்தக வாசிப்பனுபவத்தை பலருடனும் பகிர்ந்து கொள்ளும் முனைப்பில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

Entangled Life ( சிக்குண்ட வாழ்க்கை) என்ற இந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் Merlin Sheldrake இவர் உயிரியல் படித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த துறையில் Ph.D பட்டம் பெற்றவர்.

இவரின் முதுமானிப்பட்டத்திற்கான ஆய்வு ஃபங்கி நுண்ணுயிர்களுக்பும், மரங்களுக்கும், பக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு உயிரினங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்கி நிற்கிறது.

“மரங்கள் இரை தேடிச்செல்வதில்லை, அவைகள் முளைத்த இடத்தில் இருந்தே சூரிய ஒளியில் இருந்து தங்களுக்கான உணவை உற்பத்தி செய்கின்றன. தங்களுக்கான நீரைத்தங்கள் வேரின் மூலம் நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சுகின்றன. “

பள்ளிக்கூடங்களில் நமக்கு மரங்கள் பற்றி கற்பிக்கப்பட்டவை இவ்வளவு தான். என்னைப்போன்ற பலருக்கு விடை காணமுடியாத பல கேள்விகள் மரங்களின் வாழ்வும் வளமும் பற்றி மனதில் உதித்திருக்க கூடும்.

  • விண்ணை நோக்கி வளர்ந்த பெரும் விருட்சங்களால் சூரிய ஒளியில் இருந்து தங்களின் உணவை தயாரித்துக்கொள்ள முடியும், ஆனால் ஒளி புக முடியாத அடர்ந்த காட்டில் வளரும் சின்னஞ்சிறிய தாவரங்கள் எங்கிருந்து ஒளியை பெற்று உணவை தயாரிக்கின்றன?

  • அவைகள் யார் தயவில் எப்படி வளர்கின்றன?

  • ஆழமான நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரை உறுஞ்சும் அளவிற்கு அவற்றின் வேர்கள் வளரவில்லை என்ற பட்சத்தில் அவைகள் எங்கிருந்து நீரையும் தமக்கான ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக்கொள்கின்றன?

  • பல முதிர் மரங்களின் காலடியில் மழைக்கு பின் பவ்வியாமாகவும் எந்த வித முன்னறிப்புக்களும் தராமல் பளிச்சென்று முகம் மலரும் பல வண்ணக்காளான்களுக்கும் அந்த மரங்களுக்கும் என்ன சம்பந்தம்?

  • தண்ணீர் அற்ற பாறைகளின் மேல் பூத்துக்குலுங்கும் செடிகள் எப்படி தங்களை வளப்படுத்துகின்றன?

  • பனை மரங்களின் மேலும் இலுப்பை மரங்களின் மீதும் பின்னிப்பிணைந்து ஒட்டி உறவாடி பூத்துக்குலுங்கும் பல வண்ண ஓர்கிட் செடிகளுக்கு அந்த பெரும் விருட்சங்கள் எந்த அடிப்படையில் தங்களின் அங்கத்தில் இடமளித்து வாழ்வழித்தன?

  • அவைகளுக்கு நடுவில் என்ன வகையான கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் நடைபெறுகின்றன? இவைகள் எல்லாமே பரசைட் என்கிற ஒட்டுண்ணிகளா?

இப்படி இயற்கையை பார்க்கும் போதெல்லாம் எமக்கு இதுவரை தோன்றிய பல கேள்விகளில் சில கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காமல் போகும் நேரங்களில் வெறுமனே கடவுளின் படைப்பின் அற்புதங்கள் இவை என்று பிரமித்து போக மட்டுமே முடிந்திருக்கிறது.

உறவுறாத எந்த உயிரினாலும் இந்த உலகில் தான் வாழும் காலத்தில் சுபீட்சமாக வாழமுடியாது. மேலும் தன்னையும் தன் இருப்பையும் தன் காலம் தாண்டி தக்க வைத்துக்கொள்ளவேண்டுமானால் உயிர்கள் தங்களின் கண்ணுக்கெட்டிய கரை தாண்டி நகர்ந்து புதிய தேடல்களை செய்ய வேண்டும்.

இந்த உலகில் வாழும் நுண்ணுயிர்களில் இருந்து பெரிய விலங்குகள் வரை தங்களை தக்கவைத்துக்கொள்ள முதலில் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து போராடுகின்றன. அதற்காக தங்களை அந்த வாழ்விடங்களோடு பொருத்திக்கொள்ள முனைகின்றன, தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்து கொள்ளவும் எத்தனிக்கின்றன, வலியன பிழைக்கும் என்ற பரிணாம வளர்ச்சி தத்துவத்திற்கு இணங்க இயற்கைத் தேர்வின் அடிப்படையில் தங்கள் இணைகளை தெரிவு செய்கின்றன என்றார் உயிரியல் தந்தை சார்ள்ஸ் டார்வின்.

அவரின் கடல் பயணங்கள் மூலமும் அவரின் கடின உழைப்பின் மூலமும் தன் விஞ்ஞான ஆய்விகளினால் கண்டறிந்த விடயங்களை விஞ்ஞானபூர்வமான சாட்சிகளுடன் நேர்த்தியாகவும் மிக நேர்மையாகவும் முன்வைத்தார். “வலியன பிழைக்கும்” என்ற அவரின் பரிணாம வளர்ச்சி த்த்துவத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்த முதலாளித்துவ பொருளாதாரம் தங்களின் நியாயமற்ற உழைப்பு சுரண்டல் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் இந்த பரிணாம வளர்ச்சி கோட்பாட்டினை வைத்து நியாயப்படுத்தியது மனித குலத்தின் துர்அதிஷ்ரம்.

பொதுவாக எந்த ஓர் உயிரினமும் தான் வாழும் இடமும் சூழலும் தன் இருப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கும் போதும் தன் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறது என்று உணர்கிற பட்சத்திலும் அடுத்த கட்டமாக தங்களுக்கு ஏற்புடையதோர் சூழலைத்தேடி இடம் பெயர்கின்றன என்பது தான் உண்மை.

ஆகவே அவைகள் கண்ணுக்கெட்டியவரை கரை தாண்டி என்னவெல்லாம் இருக்கின்றன என்ற கணிப்பீடுகளை செய்கின்றன. பின்னர் எவையோடெல்லாம் அல்லது யாரோடெல்லாம் கூட்டுறவு வைத்துக்கொள்வதனால் தங்களை தக்கவைத்துக்கொள்ளவும் மேலும் வளர்த்துக்கொள்ளவும் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச்செல்லவும் முடியும் என்பதை ஆராய்கின்றன. பின்னர் பயம் களைந்து முதலாவது அடியை எடுத்து வைக்கின்றன.

ஆனால் வளருதலும் முன்னேற்றம் அடைதலும் பரஸ்பரம் கூட்டிணையும் இரு சாராருக்கும் நன்மை பயக்கும் என்ற பட்சத்தில் மட்டுமே அந்த உறவு புறநிலை சவால்கள் தாண்டி நிலைக்கும். அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இயற்கை. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திற்கு முன் தோன்றிய மூத்த நுண்ணுயிரை லைக்கன் (lichen) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இவை ஃபங்கி, பக்ரீடிரியா மற்றும் வைரஸ் போன்ற ஏதோ ஒர் நுண்ணுயிரினதும் அல்கி என்ற பாசியினது கூட்டுறவில் இணைந்த ஓருடல் ஈருயிர்கள். இவை பெரும் பாறைகள் மற்றும் மரங்களில் செம்மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களில் பாசி போன்று படர்ந்து தோற்றமளிக்கின்றன, புற்கள் போன்ற வடிவிலும் மரங்களில் படர்ந்திருக்கும், இவை பாறைகளுக்குள் வீரியமாக அமிலத்தை பாய்ச்சி மண்ணை அரித்து, மண்ணில் உள்ள கனிமங்களை உறிஞ்சும் வல்லமை பெற்றவை, இதனால் பாறைகளில் இருந்து பூமிக்கு கனிம்ம் செறிந்த மண் கிடைக்கிறது. வாழ்தலையும் மேலும் வளர்தலையும் தனியே இந்த நுண்ணுயிர்களினால் செய்ய முடியாத பட்சத்தில் இப்பேர்ப்பட்ட “symbiotic” சிம்பயோற்றிக் என்று சொல்லப்படுகின்ற கூட்டுறவின் மூலம் செயல்ப்படுத்துகின்றன.

1877 ல் ஜேர்மனியை சேர்ந்த அல்பேர்ட் ஃபிராங் என்ற தாவரவியலாளர் முதல் முதலில் “ சிம்பயோசிஸ்” என்ற சொல்பதத்தை கண்டுபிடித்தார். இதன்பின்னர் பரிணாம வளர்ச்சி என்பது வெறுமனே உயிர்களினிடையே போட்டி மற்றும் மோதல்களினால் நடத்தப்பட்டு ஒன்றை இன்னொன்று தாக்கியழித்து எதிர்நீச்சல் போட்டு வலியன பிழைத்தல் கிடையாது என்று அந்த துறை சார்ந்தோர்கள் மத்தியில் விவாதப்பொருளானது

சிம்பயோசிஸ் என்ற விடயம் மூலம் உயிர்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வைத்து டார்வினின் “ வலியன வெல்லும்” பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை முதலில் ஆதாரங்களுடன் உடைத்தவர் Lynn Margulis என்கிற ஒரு பெண் விஞ்ஞானி. இவர் 1967 ல் Prokaryotes என்ற மூத்த ஒற்றை செல் பக்டீரியாக்கள் கூட “ fusion and merger” Endosysmbiosis theory என்கிற கலத்தலும் இணைதலும் மூலம் பிற நுண்ணுயிர்களுடன் சங்கமித்தமையால்த்தான் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை எழுதினார். அவர் முன்வைத்த விளங்களின் எழுத்துப்பிரதி பதினைந்து தடவைகள் வெளியீட்டாளர்களால் வெளியிடாமல் நிராகரிக்கப்பட்டதுடன் சக உயிரியல் விஞ்ஞானிகளால் அந்த காலகட்டத்தில் பகிடிக்குள்ளாக்கப்பட்டது.

1970 ல் தொடந்தது வந்த உயிரியல் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் அவரின் கோட்பாட்டை சரி என்று நிறுவியது. குறிப்பாக லைக்கன் என்ற நுண்ணுயிரின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு. அதைத்தொடர்ந்து முன்னணி உயிரியல் விஞ்ஞானி ஆன ரிச்சாட் டோர்க்கிட் அவரை 20 ஆம் நூற்றாண்டின் முண்ணனி பரிணாம வளர்ச்சி கோட்பாட்டாளர் என்று பாராட்டினார்.

பூமி தோற்றம் பெற்று கொதி மண்டலமாக இருந்த காலகட்டத்தில் எந்த ஒரு உயிரினமும் தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகள் பூமியில் இல்லை.

பூமி கற்களாலும் பாறைகளாலும் சூழ்ந்திருந்தது. மண் என்ற ஒரு விடயம் ஆதியில் பூமியின் மேல் கிடையாது, வெறுமனே அனல் கொதிக்கும் புயல்க்காற்று பூமிப்பந்தில் சுழன்று சன்னதம் ஆடிய யுகம் அது. ஒற்றை செல்லுடன் சில நுண்ணுயிர்கள் நீரில் மட்டும் வாழ்ந்து வந்தன.

லைக்கன்கள் பூமியில் வந்த பின் பூமியில் மண் தோன்றியது. அதனைத்தொடர்ந்து இற்றைக்கு அறுநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வேர்கள் அற்ற ஒரு வகை (algae ) அல்கி நீரில் இருந்து நிலத்திற்கு இடம்பெயர்ந்தது.

வேர்கள் அற்ற பாசியானது கடலில் இருந்து கரைக்கு வந்ததும் அதனை நிலத்தில் இருந்த ஃபங்கி வேர்கள் பற்றிக்கொண்டு அவைகளை நிலத்தில் கால் ஊன்ற வைத்தன. நிலத்தில் இருந்து தாவரத்திற்கு தேவையான கனிமத்தையும் நீரையும் உறிஞ்சி ஃபங்கி வேர்கள் அதற்களித்து அதனை வான் நோக்கி நிமிர்த்தியதும் அவை சூரிய ஒளியில் இருந்து உணவை தயாரிக்க தொடங்கின. பின்னர் அந்த மரங்கள் அவைகளிடம் சேமிப்பில் மிதமாக உள்ள கார்பனை ஃபங்கி வேர்களுக்கு வழங்கின. இன்றும் உலகத்தில் இருக்கின்ற மைக்கோறைசல் என்னும் ஃபங்கி வேர்களில் தொண்ணூறு வீதமான மரங்கள் தங்கி இருக்கின்றன.

அந்நியர்களுக்கிடெயிலான அந்நியோன்யம் ஃபங்கி வேர்களின் வலைப்பின்னலை ( Mycelium network) என்று அழைக்கிறார்கள். அந்த ஃபங்கி வலைப்பின்னல் பல ஹைஃபீ என்ற வேர்க்கால்களைக்கொண்டது. அவைகள் ஓரே நேரத்தில் பல இடங்களுக்கு கிளை பரப்பி உணவு தேடிச்செல்கின்றன, பட்ட மரங்களின் மேல் படர்ந்து அவற்றை உக்கப்பண்ணுகின்றன, அது மட்டுமன்றி யப்பானில் அபாயகரமான அணுசக்தி கழிவுகள் உள்ள இடங்களில் அவை அதிகமாக வளர்வதை விஞ்ஞானிகள் அவதானித்த போது அவை அணுஉலைக்கழிவுகளை உட்கொண்டு செரிப்பதனை கவனித்துள்ளனர்.

மைசீலியம் வலைப்பின்னல்கள் பயணிக்கும் அந்தப்பாதைகளில் இரை கிடைக்காத பட்சத்தில் அதன் வேர்க்கால்கள் தங்கள் பயணத்தை நிறுத்தி பாதையை மாற்றிக்கொள்ளும். அவை ஒரே நேரத்தில் பல கிளைகளை விரித்து பல திசைகளை நோக்கி பயணிக்கவல்லன. ஒரு மைசீலியம் ஃபங்கி வலைப்பின்னலானது பல வகையான மரங்களின் வேர்களோடு ஓரே நேரத்தில் தன்னை பிணைத்துக்கொள்ள வல்லது. ஒரே நேரத்தில் பல மரங்களோடு உறவுறல் அதன் முன்னேற்றத்திற்கும் நீட்சிக்கும் உதவுகிறது.

ஏற்றுமதி இறக்குமதி என்று வரும்போது இன்று உலக நாடுகள் கூட தங்கள் வர்த்தக ஒழுங்கை இப்படித்தான் வகுத்துகொள்கின்றன. ஒரு பொருளை ஒரு நாட்டில் இருந்து மட்டும் எந்த நாடுகளும் கொள்வனவு செய்வதில்லை, ஏனெனில் அந்த நாட்டில் யுத்தம் மூண்டாலோ இல்லை வேறு சில அனர்த்தங்களினால் இறக்குமதி தடைப்பட்டாலோ அவர்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதனால்.

ஆக இதுவரையிலும் இந்தப்பூமியில் மனித மூளையே உலகின் உச்ச பட்சம் அறிவாற்றலையும் வெற்றிப்பாதைகளின் சூட்சுமத்தையும் சூத்திரங்களையும் முற்றுமுழுதாய் அறிந்து கொண்ட ஒன்று என்ற அந்த பொதுப்புத்தியில் உறைந்த நம் சிந்தனையை முறியடிக்கும் ஒன்றாக இந்த புத்தக வாசிப்பு அமையும்.

மேற்குறிப்பிட்ப விடயத்தை “ Intimacy of strangers” ( அன்னியர்களுக்கிடையிலான அந்நியோன்யம்) என்ற அத்தியாயத்தில் மெர்லின் ஷெல்றேக் விளக்குகிறார். மேலும் ஸுசான் சிம்மார்ட் என்ற கனடாவை சேர்ந்த பெண் உயிரியலாளர் கடந்த பத்தாண்டுகளில் ஃபங்கி வேர்களின் வலைப்பின்னல்கள் பற்றி விரிவான விஞ்ஞான பரிசோதனைகள் நடத்தினார் மரங்கள் காட்டில் தங்களுக்கு இணக்கமாக இருக்கும் மரங்களோடும் எப்படியான கொடுக்கல் வாங்கல்களை பேணுகின்றன என்றும், தாய் மரங்கள் சூரிய ஒளியில் இருந்து உணவைத்தயாரிக்க இயலாத சேய் மரங்களுக்கு எவ்வாறு ஃபங்கி வலைப்பின்னல்கள் மூலம் உணவளிக்கின்றன மற்றும் இதர மரங்களுடன் தகவல்களை பரிமாறுகின்றன என்றும் எழுதியுள்ளார். அவர் கண்டுபிடுப்புக்களையும் தவறாமல் இந்த புத்தகத்தில் மேர்லின் ஷெல்ரேக் பேசுகிறார்.

விவசாயம் செய்வதற்காக காடுகளை அழிக்கும் போது எப்படி பல்லுயிர்களுடன் கூடிய காட்டின் இயற்கையான சமநிலை பாதிக்கப்படுகிறதோ அதே போல விவசாயத்திற்காக நிலத்தை உழும்போதும் செயற்கை உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை பாவிக்கும்போதும் அந்த மண்ணில் இயல்பாக இயற்கையாக இருக்க கூடிய பல்வகை மைக்கோறைசல் வலைப்பின்னல்களின் சமநிலை பாதிக்கபடுகிறது.

மேலும் ஃபங்கி வேர்கள் மண்ணில் இருக்கும் கனிமங்கள் மழை நீரோடு அடித்து செல்ல்ப்படாமல் தடுப்பதோடு 50 வீதம் அதிகமான நீரை மண்ணில் சேமித்து வைக்கவும் மண்ணை ஈரலிப்பாக வைக்கவும் உதவுகிறது. மண்ணிற்கும் மர்ங்களுக்கும் மற்றும் இயற்கைக்கும் கூடுதல் நன்மை தரக்கூடிய மைக்கோறைஸா வகைகளை கண்டறிவதற்காக தாவரவியல் ஆய்வு மையங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படக்கூடிய விடயங்கள் விவசாயத்தை எதிர்காலத்தில் புதியதோர் தளத்திற்கு நகர்த்திச்செல்லும் என்பதில் ஐயமில்லை.