வேண்டாம் என்னை நிர்வாணப்படுத்தாதே!

- சாம் பிரதீபன் -

நீண்ட மெளனமொன்றை உடுத்தியிருக்கிறேன்.

என்னை நிர்வாணப்படுத்தாதே!

சொற்களின் தேன் சொட்டுக்களில்

நஞ்சேற்றியது நீதான் எனில்

என் மெளனத் துகில்

உனக்கு பாதுகாப்பானது

என்னை நிர்வாணப்படுத்தாதே!

 

நேற்றையைப் போல்

முன்னெப்போதோ வந்த

ஒரு ஆந்தையின் அலறல்,

அதற்குப் பிந்தியதாய் வந்த ஆலகாலம்,

இரண்டுக்கும் நடுவே வந்து

என்னுடன் நிரந்தரமாய் தங்கிய

உன் புரிதலுக்குள் உட்படாத சித்தார்ந்தம்,

இவைகளைத் தாண்டியும்

உடுத்த முடிந்திருக்கிறது இந்த மெளனம்.

வேண்டாம் என்னை நிர்வாணப்படுத்தாதே!

 

நான் மெளன ஆடை கழற்றிப்போடாதவரை

உனக்கு மட்டுமல்ல,

நீ நம்பும் கடவுள்களுக்கு,

உன் கருத்து வேதாந்தங்களுக்கு,

நீ படித்துமுடித்த நூல்களுக்கு,

உனக்குப் பிடித்த இசங்களுக்கு,

உன் கோட்பாடுகளுக்கு,

நீ பீற்றும் அரசியலுக்கு,

வரைந்து காட்டப்பட்ட உன் கோடுகளுக்கு,

முற்போக்கு எனச் சொல்லி

நீ வனைந்த சிற்பங்களுக்கு,

மனிதர்களை குறைத்து மதிப்பிடும்

உன் நீள விரல்களுக்கு,

நீ விரும்பும் முற்சார்புகளுக்கு,

இன்னும் இன்னும் பலவற்றுக்கு

பாதுகாப்பின்மை இல்லை.

ஆதலால் வேண்டாம்

என்னை நிர்வாணப்படுத்தாதே!