வனப்புகள் வற்றிய ஒரு கிணறு

- குணாளினி தயாநந்தன் -

வட்டக்கிணறு;

“வழுக்கும் வழுக்கும்” எனத்

தாய்மார் கதறவைக்கத் தக்கபடி

மென்பாசி பூசிய கிணற்றுக் கட்டு;

எட்டிப் பார்த்தால்,

எல்லையில்லாத் தன்வனப்பை

அள்ளி ஊற்றும்.

அங்கோர் மாயஉலகம் உயிர்க்கும்.

மென் நீலமா? பொன் நீலமா?

என்நீர் என வினாவெறியும்.

விடையில்லாக் கேள்விகளை

விசிறி எறிவது அதன் பழக்கம்:

அங்கே…

மௌனத்தவம் இயற்றும்

மாமுனிவர்களாய்

ஓரிரு பழுப்பு இலைகள் மிதக்கும்.

“அமிழ்ந்து விடாதே;மிதப்பதே சுகம்;

மல்லாந்து படுத்து நீந்து மகளே,

சுழிகளில் அமிழாத

சுகம் உனதென ” என

புதுவிதி போதிக்கும்.

உயர்ந்த தம்கால்களின் மேல்

உடம்பு தாங்கிய நீர்ப்பூச்சிகள்

சடுதியாய் ஓடிச் சாகசம் காட்டும்.

சறுக்கும் அப்பூச்சிகளின்

குறுக்கறுப்பில் நீரிசை கிளம்பும்.

வெண்ணுரை பூக்கும்;

கிணற்றின் தண்சிரிப்போ?

பார்க்கச் சலியாத பெருங்கூத்து:

இன்னும் கொஞ்சம் எம்பும் எத்தனிப்பில்,

என்குதி உயரும்.

நுனிக்காலில் நிற்குமென்

விழிமலர்கள் பூக்கும்.

ஒரு சிறுஒளிக்கோடு

வானவில்லாய் விரியும்.

பொன்னொளி சிதறும் நீர்முத்துக்களை

கண்களில் எறிவது யார்? கிணறா?

அதனழகு பருகவந்த கதிரவனா?

காலத்துக்கு என்ன?

கரைவது அதன் வேலை.

கிடக்கட்டும்.

கிணற்றின் அழகென்னை

அங்கே கட்டிப் போட்டுவிடும்;

நீர்ப்பரப்பின் மேலாக நின்றுகொண்டு,

வானம்பார்க்கும் ஒருசில படிக்கட்டுக்களை

மேலிருந்து கீழும்

கீழிருந்து மேலும்

எண்ண எண்ணச் சலிக்காது.

என் முதற்குளியல், முழுக வார்ப்பு

மென் விசும்பல், பேரழுகை

எல்லாம் இங்கே தான்:

நினைவுகளால் சுகந்தமுற்ற

நன்னாள் ஒன்றின் மலர்வில்,

என் முதற்காதலின் முகத்தை

தன்முகத்தில் பதிவேற்றி இருந்தது,

நாணத்தில் என்பதின்மம் சிவக்க;

குறும்புதான்; வேறென்ன?

வலது காதை

கிணற்றுக்கட்டில் சரித்து

விழிகளை மெல்ல மூடினால்

குளிர்ந்த தாய்விரலாய்த் தடவும்.

இடது காதைச் சரித்தால்

எதுவுமில்லா மௌனத்திலிருந்து

கிளைக்குமோர் புதிய இசை

என் உயிரை அசைக்கும்.

கிணற்றின் கீதம் போலும்;

அதுதான் பாடியிருக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம்

என்னோடு வாழ்ந்திருந்த

கிணற்றைப் பற்றி

என்பாட்டி சொன்னாள் ஒருநாள்,

எங்கடை ஆக்கள் தவிர

எவர்கையும் படாத பொன்கிணறு…..

புனிதக் கிணறு….

இந்த ஊரிலையே இது ஒண்டுதான்

அன்றுதான்,

அக்கிணற்றின் வனப்புகள் எல்லாமும்

வற்றிப் போயின.