வாக்களிப்பு இன்றியே ஓய்வூதியச் சட்டமூலம் நிறைவேறியதால் நாடெங்கும் பதற்றம்!
Kumarathasan Karthigesu
நகரங்களில் இரவிரவாக ஆர்ப்பாட்டம், வன்முறை!!
ஒன்பது வாக்குகளினால் தப்பிப் பிழைத்தது அரசு!
பிரான்ஸின் அரசமைப்பின் 49.3 ஷரத்தின் கீழ் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகள் தோல்வியடைந்ததை அடுத்து அதே அரசமைப்பு விதிகளின் கீழ் ஓய்வூதியத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றியே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாட்டின் அரசமைப்பின் கீழ் தற்சமயம் சட்டமாக்கப்பட்டுவிட்ட போதிலும் அதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எலிசபெத் போர்னின் அரசைக் கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முன்வைத்த பிரேரணைகள் நேற்று முன்னிரவு சபையில் தோல்வியடைந்த கையோடு பாரிஸ் உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. பாரிஸில் இளைஞர் குழுக்கள் ஆங்காங்கே வீதிகளில் பொலீஸாரோடு மோதியதால் இரவிரவாகப் பதற்றம் நிலவியது.
நகரில் சில இடங்களில் வீதிகளில் அகற்றப்படாமல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளுக்குத் தீ மூட்டப்பட்டது.
போர்தோ (Bordeaux) றென் (Rennes) ஸ்ரார்ஸ்பூ (Strasbourg) லீல் (Lille) துளூஸ்(Toulouse) லீமோஸ்(Limoges) , செய்ன் எற்றியன் (Saint-Etienne) பிரெஸ்ட் (Brest,) லியோன்(Lyon) றுவன் (Rouen) , நான்ஸி (Nancy) உட்படப் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் மக்கள் பேரணிகளும் அதை ஒட்டிய வன்செயல்களும் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
நாடாளுமன்றத்துக்கு அருகே வீதியில் இரவிரவாக ஒன்று திரள முயன்ற கூட்டத்தினரைப் பொலீஸார் தடுத்து வெளியேற்றினர். பாரிஸில் ஆர்ப்பட்டக்காரர்களை அடக்குவதற்குப் “பொலீஸ் வன்முறை” பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் தங்கள் சமூகவலைத் தளப் பதிவுகளில் பொலீஸ் வன்முறைக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இடதுசாரிகளது முழு ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட பிரேரணை வெறும் ஒன்பது வாக்குகளினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது வாக்குகள் செல்வாக்கிலேயே இந்த அரசு பாதுகாக்கப்பட்டிருப்பது எதிர்க் கட்சிகளையும் அரசை எதிர்க்கின்ற நாட்டு மக்களையும் கடும் சீற்றமடையச் செய்துள்ளது.பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் “அரசு செத்துவிட்டது. அதன் ஆத்மா சாந்தி அடையட்டும் ” என்று தெரிவித்திருக்கிறார். தீவிர வலதுசாரியான மரின் லூ பென்,புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அதிபர் மக்ரோனைக் கேட்டுள்ளார். இந்தப் பின்னணியில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை முழு வீச்சில் தொடங்குதற்கு எதிர்க் கட்சிகளும், அடுத்த கட்ட நாடளாவிய அணிதிரள்வுகளுக்குத் தொழிற் சங்கங்களும் தயாராகிவருகின்றன.
அதிபர் மக்ரோன் பிரதமரையும் ஆளுங்கட்சித் தலைவர்ககளையும் எம்பிக்களையும் இன்று செவ்வாய்க்கிழமை எலிஸே மாளிகைக்கு அழைத்து முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு ஓய்வூதியச் சட்டத்தை தன் விருப்பப்படிநிறைவேற்றியதனால் மக்ரோன் ஜனநாயக வழிமுறைகளைத் தடுத்து எதேச்சாதிகாரமாகச் செயற்படுகிறார் என்று குற்றம்சாட்டப்படுவதால் அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
ஒன்பது ஆதரவு வாக்குகளால் தப்பிப் பிழைத்துள்ள – பெரும்பான்மை இல்லாத-ஒர் அரசை தொடர்ந்து பதவியில் தக்க வைத்திருப்பது அரசுத் தலைவருக்குப் பல அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும். எனவே ஓய்வூதியச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களது சீற்றத்தைத் தணிப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதற்காகவும் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டரங்களில் காணப்படுகிறது.
இதேவேளை, வியாழக்கிழமை நடைபெறவுள்ள அடுத்த கட்ட வேலை நிறுத்தமும் பேரணிகளும் முழு உச்ச அளவில் நாட்டை முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.