ஓய்வூதியச் சட்ட நகல் அதன் ஜனநாயகப் பயணத்தின் முடிவிடம் வரை செல்லட்டும்!
Kumarathasan Karthigesu
மக்ரோன் நேற்றிரவு செய்தி ,அரசாங்கத்தைக் கவிழ்க்க முக்கிய பிரேரணைகள் இன்று.
ஓய்வூதியத் திருத்தச் சட்டம் சகலரது மரியாதையுடன் உரிய ஜனநாயக வழியிலான அதன் பயணத்தில் இறுதி முடிவிடம் வரை செல்லட்டும்.
அரசுத் தலைவர் மக்ரோன் இவ்வாறு விரும்புகிறார் என்று நேற்றிரவு எலிஸே மாளிகையில் இருந்து ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் தலையெடுத்துள்ள அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நடுவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவர்களது வதிவிடங்கள், அலுவலகங்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மக்ரோன், எம்பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு சகல விதமான ஏற்பாடுகளையும் செய்யும்- என்று உறுதியளித்திருக்கிறார்.
எலிசபெத் போர்னின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக எதிர்க் கட்சிகள் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘லியோட் ‘(Liot) என்ற கட்சி சாராத சுயாதீன எம்பிக்கள் குழு சார்பில் ஒன்றும் மரின் லூ பென் அம்மையாரின் தேசிய எழுச்சிக் கட்சியின் (Rassemblement national) சார்பில் மற்றொன்றுமாக இரண்டு பிரேரணைகள் சபைக்கு வருகின்றன. அவை இன்று திங்கட்கிழமை பகல் நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன. அவற்றின் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினமே இரவு நடைபெற வாய்ப்புள்ளது. மக்ரோனின் அரசு தப்பிப் பிழைக்குமா என்ற பரபரப்பின் மத்தியில் அரசியல் நிலைமை சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் நாடெங்கும் அரசு எதிரப்பு ஆர்ப்பாட்டங்களும் வன்முறையாக மாறித் தீவிரமடைந்துள்ளன.
பிரான்ஸில் ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகளால் அதிகரிப்பது உட்படச் சில சீர்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய திருத்தச் சட்ட மூலத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பி நாடு முழுவதும் அமைதியின்மை தலைவிரித்தாடுகின்றது. வீதி மறிப்பு, முற்றுகை, திடீர் ஒன்று திரள்வுகள், பேரணிகள் எனப் பல சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொலீஸாருக்கு எதிரான வன்முறைகளும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் வீதிக்கு வீதி இடம்பெறுவருகின்றன.
ஓய்வூதியச் சட்ட மூலத்தை அரசமைப்பின் 49.3 அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவதைத் தவிர்த்துவிட்டு வேறு வழிமுறையில் சட்டமாக்குவதற்கு அரசு தீர்மானித்ததைத் தொடர்ந்தே நாடெங்கும் மக்கள் கொந்தளிப்பு தீவிரம் பெற்றுள்ளது. அதற்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லா பிரேரணைகளை முன்வைத்துள்ளன.
????எரிக் சியோட்டியின் அலுவலகம் மீது தாக்குதல்
இதேவேளை, வலதுசாரி “லே ரிப்பப்ளிக்கன்” (Républicains) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எரிக் சியோட்டியின் (Éric Ciotti) நீஸ் நகரில் உள்ள அலுவலகம் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவரது அலுவலகம் தாக்கப்பட்டிருப்பதை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். பிரான்ஸின் இரண்டு பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று ரிப்பப்ளிக்கன் கட்சி. முன்னாள் அதிபர் சார்க்கோசியின் தாய்க் கட்சி. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மக்ரோன் அரசின் ஓய்வூதியத் திருத்தச் சட்ட மூலத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கின்றனர்.
ஓய்வூதியத் திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு ரிப்பப்ளிக்கன் வலதுசாரிகளது ஆதரவையே எலிசபெத் போர்ன் அரசு முழுமையாக நம்பி இருந்தது. இப்போது அந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில் போர்ன் அரசு தலைதப்பிப் பிழைப்பதும் வலதுசாரி எம்பிக்களின் கைகளிலேயே முழுக்க முழுக்கத் தங்கியுள்ளது.