தாளையடி கிராமத்தில்  உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் வேலைத் திட்டம்.


வடமாராட்சி, தாளையடி கிராமத்தில் உருவாக்கப்பட்டு வருகின்ற யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உவர்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் வேலைத் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டு, குறித்த திட்டத்தினை செழுமைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு சூய்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு வருகின்ற உவர்நீரை குடிநீராக்கும், தாளையடி குடிநீர்  திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சூயஸ் நிறுவனத்தின் கள அதிகாரிகள் உட்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் சுமார் 14 ஆயிரத்து 559 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த திட்டத்தின் மூலம் நாளாந்தம் சுமார் 2 கோடி 40 இலட்சம் லீற்றர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் வேலைத் திட்டங்கள் இந்த வருட இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கபடுவதுடன் முதல் கட்டமாக மீசாலை வரையான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தினை ஆரம்பிப்பதற்கும் தொடச்சியாக ஏனைய பிரதேசங்களுக்கு விநியோகத்தினை விஸ்தரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்னமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தாளையடி குடிநீர் திட்டத்தின் சமூக பாதுகாப்பு பங்களிப்பு திட்டத்திற்கு அமைவாக வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்திற்கு வழங்குவதற்காக 58 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகின்ற ஜஸ் தொழிற்சாலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். குறித்த ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை மூலம் நாளொன்றிற்கு 5,000 கிலோ கிராம் ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன், ஐஸ் உற்பத்திக்கான மின்சாரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான சூரிய கலங்களும் பொருத்தப்பட்டுள்ளமையினால் குறைந்த செலவில் ஐஸ் கட்டிகளை கடற்றொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.