ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு : தீர்வு கிடைக்கா விட்டால் போராட்டம் தொடரும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அடுத்த வாரம் நடத்தப்படும் கலந்துரையாடலில் தீர்வு கிடைக்கா விட்டால் மிகப்பெரும் அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள, காலவரையறையை முழுமையாக நிராகரிப்பதாகவும் அக்கூட்டமைப்பு ஏகோபித்து தீர்மானம் எடுத்துள்ளது.தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 47 வரையிலான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து ஜனாதிபதி தரப்பிலிருந்து எழுத்து மூலமான அறிவிப்பொன்று கிடைக்கப்பெற்றது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள காலவரையறையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் அடுத்த வாரம், எம்முடன் கலந்துரையாடப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இலங்கை வங்கிச் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் சேனநாயக்க கருத்துத் தெரிவித்தர். ஆகவே, புதிய வரி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் எமது நியாயமான கோரிக்கைகளை அதன்போதும் வலியுறுத்துவோம். அதற்குரிய தீர்வு கிடைக்காது விட்டால் நாம் நிச்சயமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தி முன்னெடுப்போம். அது நாட்டின் சாதாரண இயல்புநிலையை வெகுவாகப் பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.