விறகு சேகரிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்.
நுவரெலியா, பிதுருதலாகல மலை காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா பீட்ரு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கொலந்துவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விறகு வெட்டச் சென்று மாலை நேரம் வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் , பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விறகு சேகரித்துக் கொண்டிருந்த இடத்தில் சரிவான பகுதியில் இருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு இரவு சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் , நுவரெலியா மரணவிசாரணை அதிகாரியான பாலசேகரன் ருத்திரசேகரனும் சடலத்தை பார்வையிட்டதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு நுவரெலியா மாவட்டபொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட நபரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.
இந்த பிரேத பரிசோதனையை நுவரெலியா சட்ட வைத்தியர் ஐ. கே. எஸ்.கே.வீரசேக்கர மற்றும் நுவரெலியா மரணவிசாரணை அதிகாரி பாலசேகரன் ருத்ரசேகரன் மேற்கொண்டிருந்தனர். என்பதும் குறிப்பிட த்தக்கது.