வலுக்கிறது “ட்ரோன்” மோதல்!

Kumarathasan Karthigesu

எரிபொருள் மையம் மீது மொஸ்கோவில் இலக்கு

ரஷ்ய வேவு விமானம் மீது பெலாரஸில் ட்ரோன் தாக்கு

சென். பீற்றர்ஸ்பேர்க் மீது மர்ம ஊர்தியால் பரபரப்பு 

வான்பரப்பை மூடி தேடுதல்

மொஸ்கோ அருகே உக்ரைன் தயாரிப்பு ட்ரோன் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது. அது ஓர் இலக்குத் தவறிய தாக்குதல் முயற்சி என்றும் சிவில் உள்கட்டமைப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தவே அது ரஷ்யாவின் வான் பரப்பினுள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மொஸ்கோவில் இருந்து நூறு கிலோ மீற்றர்கள் தொலைவில் Gubastovo என்ற பகுதியில் ரஷ்யாவின் பெரும் எண்ணெய் நிறுவனமாகிய காஸ்ப்ரோம் (Gazprom) கம்பனியின் எரிபொருள் மையம் ஒன்றின் அருகிலேயே உக்ரைனிய ட்ரோன் வீழ்ந்துநொருங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வீழ்ந்து நொறுங்கிய ட்ரோனின் படத்தை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

UJ-22 Airborne ரகத்தைச் சேர்ந்த உக்ரைனிய நிறுவனமான Ukrjet இன் தயாரிப்பு அது என்று மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை நாட்டின் தென் பகுதியில் இரு வேறு இடங்களில் உக்ரைனின் ட்ரோன் விமானங்கள் பறந்துள்ளன என்று மொஸ்கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர் தொடங்கிய பிறகு இப்போது தான் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் ரஷ்யாவின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. எனினும் உக்ரைன் தரப்பில் இத்தாக்குதல்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவங்களை அடுத்து உக்ரைனுடனான நாட்டின் எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அதிபர் புடின் பாதுகாப்பு அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இதேசமயம், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகிய சென். பீற்றர்ஸ்பேர்கின் (St. Peters burg) வான் பரப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள புல்கோவோ (Pulkovo Airport) விமான நிலையமும் மூடப்பட்டு சிவில் விமானங்கள் வேறு மார்க்கங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. மர்ம வான் ஊர்தி ஒன்று தென்பட்டதை அடுத்தே பாதுகாப்புக் காரணங்களுக்காக சென் பீற்றர்ஸ்பேர்க் வான் பிராந்தியம் மூடப்பட்டுப் போர் விமானங்கள் அங்கு தீவிர தேடுதலை மேற்கொண்டன என்று சில செய்திச் சேவைகள் தெரிவித்தன. படையினர் வான் பாதுகாப்பு ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டதை அடுத்தே சிவில் விமானப் போக்குவரத்துகள் சிறிது நேரம் தடைப்பட்டிருந்ததாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

????பெலாரஸ் சம்பவம்

இதற்கிடையே – ரஷ்யாவுக்குச் சொந்தமான ஏ-50 ரக கண்காணிப்பு விமானம் (A-50 surveillance plane) ஒன்றை பெலாரஸ் நாட்டின் வான் தளம் ஒன்றில் வைத்துத் தாக்கி அழித்து விட்டதாக அந்த நாட்டின் ஆட்சிக்கு எதிராக இயங்கும் தலைமறைவுக் குழு ஒன்று அறிவித்திருக்கிறது.

பெலாரஸின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகச் செயற்படுகின்ற”பைபோல்” (BYPOL) என்ற அரசு எதிர்ப்பு இயக்கம் இத்தாக்குதலுக்கு ரெலிகிராம் சனல் மூலம் உரிமைகோரியிருக்கிறது.

ரஷ்ய வேவு விமானத்தின் முன்பக்கம் மற்றும் நடுப்பகுதியும் ரடார், அன்ரனா கருவிகளும் ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளன என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

தலைநகர் மின்ஸ்கில்(Minsk) இருந்து 12 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள மச்சுலிச்சி(Machulishchy) வான்படைத் தளத்தில் ஞாயிறு காலை இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பாக நாடு கடந்து இயங்கும் பெலாரஸ் எதிர்க் கட்சியின் பிரமுகர்கள் தங்கள் சமூகவலைத் தளப் பதிவுகளில் தெரிவித்திருக்கின்றனர்.

மிக அரிதானதும் பெறுமதி வாய்ந்ததும் நவீன வான் கண்காணிப்பு ராடர் சாதனங்கள் பொருத்தப்பட்டதுமான முக்கிய விமானம் ஒன்றையே போருக்கு எதிரான கெரில்லாக்கள் தாக்கி அழித்து விட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பெலாரஸியன் நாட்டவர்கள் இருவர் ட்ரோன் மூலம் விமானத்தைத் தாக்கிச் சேதமாக்கிவிட்டுப் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் எதிரணியினர் கூறுகின்றனர்.

மொஸ்கோ மற்றும் பெலாரஸ் நாட்டு அதிகாரிகள் இந்தத் தாக்குதலை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் ஆட்களின்றிப் பறக்கின்ற “ட்ரோன்” விமானங்கள் மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப்படைகள் தங்களது பிடியை இறுக்கி வருகின்ற நிலையில் எல்லை தாண்டி ரஷ்யாவின் நிலப் பரப்பினுள் தனது ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் தொடக்கியிருக்கிறது.

வரும் நாட்களில் போர் களத்துக்கு வெளியே இவ்வாறான தாக்குதல்கள் வலுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">