இந்து மதம் மிகச்சிறந்த மதம்.. சிறுமைபடுத்தாதீர்கள்-பாஜக தலைவருக்கு நீதிபதிகள் புத்திமதி கூறியுள்ளனர்,
வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதி கேஎம் ஜோசப் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:- நாம் மதச்சார்பற்ற நாடு, அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். நீங்கள் கடந்த காலம் குறித்து கவலைபடுகிறீர்கள்.
முந்தைய தலைமுறையால் மூடப்பட்ட இடத்தை தோண்டுகிறீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் இவ்வாறு செய்யும்போது அது ஒற்றுமையின்மையை உருவாக்கும். நீங்கள் கடந்த காலத்தை ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். இந்தியா இன்று மதச்சார்பற்ற நாடு. உங்கள் விரல்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை நோக்கி காட்டி அதை கொடூரமானதாக கூறுகிறது. இந்த நாடு கொதித்துக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா?
வாழ்வியல் தத்துவத்தின் அடிப்படையில் இந்து மதம் மிகச்சிறந்த மதம்.. அதை சிறுமைபடுத்தாதீர்கள். உலகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இப்போதும் நான் கூறுவேன், நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் ஆனாலும் இந்து மதத்தை நான் சமமாக நேசிக்கிறேன். இந்து மதத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்து மதத்தின் சிறப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்து மதத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தாதீர்கள். நான் கேரளாவில் இருந்து வந்துள்ளேன். அங்கு கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயம் கட்ட இந்து மதத்தினர் நிலம் தானமாக அளித்துள்ளனர்’ என்றார். இந்த வழக்கில் நீதிபதி நாகரத்னா தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:- இந்து மதம் வாழ்வியல் முறை. இந்து மதம் மதவெறியை அனுமதிப்பதில்லை. நமது நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையை நமது சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தியது. அதை இங்கு கொண்டு வரவேண்டாம். மதத்தை இங்கு இழுக்காதீர்கள்’ என்றார்.