பறவைக் காய்ச்சல்: சிறுமி மரணம்! தந்தைக்குத் தொற்று!!

Kumarathasan Karthigesu

உலக நாடுகளை எச்சரித்து சுகாதார அமைப்பு செய்தி.

பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்5என்1(H5N1) வைரஸ் தொற்றினால் 11 வயதுச் சிறுமி ஒருத்தி ஆசிய நாடாகிய கம்போடியாவில் உயிரிழந்துள்ளார். அவளது தந்தையார் தீவிர தொற்று நிலையில் காணப்படுகிறார். இதனைச் சுட்டிக் காட்டி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஐ. நா. சுகாதார நிறுவனம் (WHO).

உயிரிழந்த சிறுமியுடன் தொடர்புடைய பன்னிரென்டு பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் தந்தைக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை கம்போடியாவின் சுகாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். சர்வதேச செய்தி ஊடகங்கள் இத்தகவலை உடனடியாக உலகெங்கும் வெளியிட்டிருந்தன.

பறவைக் காய்ச்சல் தொற்றினால் கம்போடியாவில் ஏற்பட்ட முதலாவது மனித உயிரிழப்பு இதுவாகும். இந்த வைரஸ் தொற்றினால் உலகில் ஏற்கனவே மனித உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் இது குறித்துக் கம்போடியா அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றோம். அதேசமயம் களநிலைப் பரிசோதனைகளையும் நடத்தி வருகின்றோம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் மற்றும் தொற்றுநோய்க்கான தயார் நிலை, தடுப்பு இயக்குநர் சில்வி பிரைண்ட் (Sylvie Briand) தெரிவித்திருக்கிறார்.

உயிரிழந்த கம்போடியாச் சிறுமி தொற்றினால் இறந்த பறவை ஒன்றுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது தந்தைக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தெளிவாக இன்னும் தெரியவரவில்லை.எச்5என்1(H5N1) வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவிய சம்பவங்கள் எதுவும் இதற்கு முன்னர் பதிவாகி இருக்கவில்லை. சிறுமி மூலம் அது தந்தைக்குப் பரவியது உறுதிப் படுத்தப்பட்டால் உலகம் இந்த வைரஸ் தொடர்பாக மிகவும் மாறுபட்ட புதிய  அச்சுறுத்தலைச் சந்திக்கும் என்று அந்த சுகாதார நிறுவன அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான சுவாச நோயை ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மிக ஆபத்தானது. மனிதர்களில் அதனால் ஏற்படக் கூடிய உயிரிழப்புக்கான சாத்தியக் கூறுகள் 50 வீதமாக உள்ளது.

பறவைகள், விலங்குகளுக்கு இடையே பரவுகின்ற எச்5என்1(H5N1) வைரஸ்கடந்த ஆண்டு முதல் சடுதியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் உலகின் பல பகுதிகளில் அது மனிதருக்குத் தொற்றுகின்ற சம்பவங்களும் பரவலாகப் பதிவாகியுள்ளன என்பதை சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் பல பகுதிகளில் இறந்து ஒதுங்கிய கடல்வாழ் பாலூட்டி உயிரினங்கள் சிலவும் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மிங் விலங்குகள், கடற் சிங்கங்கள், நீர் நாய்கள், கரடிகள், நரி, டொல்பின் போன்ற விலங்குகளிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.

பிரான்ஸிலும் மேலும் பல உலக நாடுகளிலும் கடந்த ஆண்டு முதல் கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணைகளில் மில்லியன் கணக்கான பறவை இனங்கள் தொற்றுக் காரணமாக அழிக்கப்பட்டன.

பறவைகளில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஒன்றை அமெரிக்கா பரிசோதித்து வருகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">