வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்.
பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து கிறிஸ்தவர்கள் பெயர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இது போன்ற தேர்தல் செயல்பாட்டினால் மக்களின் நம்பிக்கை சிதைந்து, சீர்செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார் தலத்திரு அவை மக்கள் தொடர்பு அதிகாரி காந்தராஜ்.
தென் மாநிலமான கர்நாடகாவில் இவ்வாண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 9,000க்கும் மேற்பட்ட, சிறுபான்மையினர் வாக்களிக்கும் தொகுதிகளில் ஏறக்குறைய 8,000 பேர் காணாமல் போயுள்ள இச்செயல் வருத்தத்திற்குரியது என்று ஆசிய செய்திகளுக்கு தெரிவித்துள்ளார் பெங்களூரு மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி காந்தராஜ்.
அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர், மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் உட்பட மொத்தம் 9,195 பெயர்களில் சுமார் 8,000 பேர் விடுபட்டுள்ளனர் என்று எடுத்துரைத்துள்ளார் காந்தராஜ்.
‘நகரில் உள்ள பல தொகுதிகள் தண்டனையின்றி சிதைக்கப்பட்டதாக உணர்வதாகவும், இதுபோன்ற தவறான செயல்கள் தடையின்றி தொடர அனுமதித்தால், தேர்தல் செயல்பாட்டில் மக்களின் நம்பிக்கை சிதைந்து, சீர்செய்ய முடியாத அளவுக்கு பாதிப்படைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார் காந்தராஜ்.
வரவிருக்கும் தேர்தல்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கான தெளிவான சூழ்ச்சி இது என்றும், பேராயரின் வேண்டுகோளுக்கு பதிலளித்து, அனைத்து பெங்களூரு தொகுதிகளிலும் கண்டன பேரணிகளை ஏற்பாடு செய்யுமாறும் பரிந்துரைத்துள்ளார் காந்தராஜ்.