பூங்காவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: கணவர் தடுப்புக் காவலில்!
Kumarathasan Karthigesu
அவரது சாட்சியத்தில் குழப்பம்
பாரிஸில் உள்ள பிரபல பூங்காவில் உடல் எச்சங்களாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் கொலை தொடர்பாக அவரது கணவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வார ஆரம்பத்தில் பாரிஸ் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் உள்ள புட் சுமோ(Buttes-Chaumont) பூங்காவில் பெண் ஒருவரது உடற் பாகங்கள் துண்டு துண்டுகளாகப் பிளாஸ்டிக் பைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. மிக மர்மமான முறையில் அங்கு மறைக்கப்பட்டிருந்திருந்த அந்தச் சடலம் அஸ்ஸியா (Assia MB) என்ற 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது. அல்ஜீரியாவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் Montreuil பகுதியில் வசித்து வந்தார்.
கடைசியாக ஜனவரி 31 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது கணவர் தனது மனைவி காணாமற் போனமை பற்றிய முறைப்பாட்டை – ஆறு நாட்கள் தாமதமாகப்- பெப்ரவரி 6 ஆம் திகதியே பொலீஸ் நிலையம் ஒன்றில் பதிவுசெய்திருந்தார். தனக்கு ஏற்பட்ட மனக் குழப்பங்களாலேயே முறைப்பாடு செய்வது தாமதமானது என்று அவர் அதற்குக் காரணம் கூறியிருக்கிறார்.
பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்ற பொலீஸார் அவரது 8,14,17 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
மனைவி காணாமற் போனமை தொடர்பாகக் கணவர் வழங்கிய தகவல்களில் “குழப்பங்கள்” அவதானிக்கப்பட்டதை அடுத்தே கொலையில் அவரது பங்கு தொடர்பான சந்தேகத்தில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில் அவர் கூறியது போன்று மனைவியைத் தேடி பாரிஸில் எந்த இடங்களுக்கும் அவர் செல்லவில்லை என்பதைக் குற்றவியல் பொலீஸார் பின்னர் கண்டறிந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் புடைவைகளைக் கொள்வனவு செய்து வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்றும் மொத்தமாக உடுதுணிகளை வாங்கி வருவதற்காகவே கடைசியாக அவர் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அப் பெண் காணாமற் போவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தனது சகோதரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
தான் விரைவில் இறந்து விடுவேன் என்று அப்போது அவர் கூறினார் என சகோதரி சாட்சியமளித்துள்ளார். பாரிஸ் செய்தி ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.