ரஷ்யத் தூதருக்கு மண்டை ஓட்டுடன் கேக் அனுப்ப முயற்சி!
Kumarathasan Karthigesu
பெல்கிரேட் தூதரகத்துக்கு பொலீஸார் தீவிர காவல்!!
சேதமடைந்த டாங்கியுடன் பேர்ளினில் ஆர்ப்பாட்டம்!!
எங்கும் நினைவு நிகழ்வுகள்
மனித மண்டை ஓட்டுடன் கூடிய கேக் ஒன்றை பெல்கிரேட் நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்துக்கு வழங்குவதற்கு செர்பிய செயற்பாட்டாளர் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்ற செர்பியரான செடோமிர் ஸ்டோஜ்கோவிக்(Čedomir Stojković) ரஷ்யப் படையெடுப்பின் ஓராண்டு நிறைவு தினமான இன்று குருதி வழியும் அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்ட அந்தக் கேக்கை ரஷ்யத் தூதரகத்துக்கு எடுத்து வந்து கையளிக்க முயன்றார்.
தூதரகத்துக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற பொலீஸார் அவரைத் தடுத்து விட்டனர். அதனால் அங்கு பெரும் பதற்ற நிலைமை காணப்பட்டது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது ஆண்டுக்குள் பிரவேசிக்கிறது. அதனை நினைவு கூருகின்ற பல்வேறு நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் உக்ரைனிலும் இடம்பெற்றுள்ளன.
லண்டனில் டவுணிங் வீதியில் போரின் நினைவாக இடம்பெற்ற மௌனம் அனுஷ்டிக்கும் நிகழ்வில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் அவரது துணைவியார் சகிதம் கலந்து கொண்டுள்ளார்.பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்தும் உக்ரைன் மக்களது துணிச்சலைப் பாராட்டியும் செய்தி வெளியிட்டுள்ளார். உலகின் முக்கிய நகரங்களில் போரை நினைவு கூர்ந்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
ஜேர்மனியின் பேர்ளின் நகரில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியோர் உக்ரைனில் சேதமடைந்த ராணுவ டாங்கி ஒன்றை அங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். அதன் பீரங்கிக் குழல் அருகே அமைந்துள்ள ரஷ்யத் தூதரகத்தை இலக்கு வைக்கும் விதமாக அதனை நிறுத்தி வைத்திருந்தனர்.
போலந்து அரசு போரின் நினைவு நாளில் ஜேர்மனியின் தயாரிப்பான முதலாவது லியோபாட் (Leopard) போர் டாங்கியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்கா புதிய ஆயுத தளபாட உதவிகளை அறிவித்துள்ளது.