சீனாவின் “ரிக்ரொக்”குறித்து ஐரோப்பா அச்சம்!
Kumarathasan Karthigesu
ஒன்றியப் பணியாளர்கள் தமது தொலைபேசிகளில் அதனைப் பாவிக்கத் தடை!
சீன நாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான”ரிக்ரொக்”(TikTok) சமூக வீடியோ வலைத்தளத்தின் பயன்பாடு ஐரோப்பாவில் மிக உச்ச அளவில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அது பற்றிய அச்சமும் நாடுகளைப் பீடித்துள்ளது. ஐரோப்பிய இணையப் பாதுகாப்பு (cybersecurity) நிபுணர்கள் ரிக்ரொக் தளத்தின் தரவுப் பாதுகாப்பு (data protection) தொடர்பில் தீவிரமான கவலை கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ தொடர்புகளுக்குப்பயன்படுத்தும் செயலிகளைக் கொண்டிருக்கும் (EU communication apps) சிமார்ட் போன் உட்பட டிஜிட்டல் சாதனங்களில் வீடியோக்களைப் பகிருகின்ற ரிக்ரொக் செயலியை வைத்திருப்பதற்கு ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஆணைக் குழுவின் பணி நிலையினர் தங்கள் உத்தியோகபூர்வ தொடர்புகளுக்குப் பயன்படுத்துகின்ற சொந்தத் தொலைபேசிகளிலும் ரிக்ரொக் செயலிகளை (app) உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மார்ச் 15 ஆம் திகதி வரை அதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் பெருநிறுவன முகாமைத்துவ சபை பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளது.
வீடியோக்களைப் பகிருகின்ற ரிக்ரொக் தளத்தின் உரிமையாளரான பைற்டான்ஸ் (ByteDance) நிறுவனம் ஐரோப்பிய ஆணைக்குழுவின் இந்த முடிவு குறித்துத் தாங்கள் பெரும் ஏமாற்றமடைவதாகத் தெரிவித்துள்ளது
தவறான வழிகாட்டுதலில் – தவறான கருத்துக்களின் அடிப்படையில் – எடுக்கப்பட்ட கவலை தரும் முடிவு இது என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ரிக்ரொக் ஊடாக சீனா முக்கிய ரகசியங்களைத் திருடக் கூடும் என்ற அச்சத்தில் ராஜதந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அதனைப் பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே தடைசெய்துள்ளது. இது தொடர்பான சட்டம் ஒன்றை அமெரிக்க செனட் கடந்த டிசெம்பரில் நிறைவேற்றி இருந்தது. இந்தியாவிலும் ரிக்ரொக் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் மாதாந்தம் சுமார் 125 மில்லியன் பேர் புதிதாக ரிக்ரொக் பயனாளிகளாக இணைந்து வருகின்றனர் என்று மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.