மொட்டுக்கு ரணில் வழங்கிய மூன்று வாக்குறுதிகள் -சஜித்.

 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கு வழங்கிய மூன்று வாக்குறுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பலப்படுத்தியுள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் தெரிவித்ததாவது:-

“தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்துள்ளார்.

மக்கள் ஆணை இன்றி மொட்டுவின் கைப்பாவையாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி, வாக்குறுதிகளை மக்களுக்காக முன்வைக்காமல் மொட்டு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இத்தகைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

மக்கள் ஆணையும், மக்கள் நம்பிக்கையும் இல்லாத இந்த அரசிடம் தான்றோன்றித்தனமான அரசியலில் ஈடுபட்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்.

மக்களின் தேர்தல் உரிமையில் தலையிட்டால் அதற்கு எதிராக வீதியில் இறங்குவோம்.இந்தத் தேர்தல் உரிமையை ஒத்திவைக்க ஆதரவளித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” – என்றார்.