மேற்கு நாடுகளே போரைத் தொடக்கின!அதிபர் புடின் சாடல்!!
Kumarathasan Karthigesu
ரஷ்யா அதன் எல்லைகளை காக்கவே யுத்தம் செய்கிறது ,
யுத்தத்தின் முதல் ஆண்டு நிறைவில் முக்கிய உரை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டுக்கு ஆற்றியுள்ள ஒரு நீண்ட உரையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோக் கூட்டணியைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். உக்ரைனில் போரை மேற்கு நாடுகளே தொடக்கின என்றும் இப்போது அதனை மேலும் விரிவாக்கி வருகின்றன எனவும் புடின் குற்றம் சாட்டியிருக்கிறார். உக்ரைன் மீதான போரைத் தீவிரப்படுத்தும் விதமான அறிவுப்பு எதனையும் அவர் உரையில் விடுக்கவில்லை. உக்ரைன் போரை “போர்” என்று அழைப்பதை வழமை போன்றே தவிர்த்தார்.
விசேட படை நடவடிக்கை என்றே குறிப்பிட்டுப் பேசினார். உக்ரைனின் மீது அழுத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நிதானமாகவும் மிகக் கவனமாகவும் படிப்படியாக நகர்வுகளைச் செய்வோம் என்றும் அவர் அறிவித்தார்.
வழக்கமாகப் பெப்ரவரி மாதங்களில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் உரையாற்றுவது வழக்கம். இந்த முறை உக்ரைன் படையெடுப்பின் ஓராண்டு நிறைவு நாளை ஒட்டி அவரது உரை அமைந்ததால் அது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும் உக்ரைன் போரைத் தீவிரப்படுத்தும் விதமான அறிவுப்பு எதனையும் அவர் தனது உரையில் விடுக்கவில்லை.
“நான் மீண்டும் சொல்கிறேன். அவர்களே போரைத் தொடங்கினர், நாங்கள் அதைத் தடுக்க எங்கள் சக்தியைப் பயன்படுத்தினோம்.
மேற்குலகின் இலக்கு வரம்பற்ற அதிகார சக்தியை விஸ்தரிப்பதே ஆகும்.உக்ரைனுக்குத் தங்களின் ஆதரவை வழங்குவதற்காக மேற்குலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வளங்களை அள்ளிக் கொட்டிப் பயன்படுத்தியது. ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற நாடுகளுக்கு அவர்கள் இவ்வாறு உதவியது கிடையாது .
ரஷ்யாவிடமிருந்து நாடுகளைப் பிரித்தெடுத்த வரலாறு இப்போது மறுவளமாகத் திரும்பி வருகிறது.
மேற்குலகம் அதன் அதிகார விரிவாக்கத்துக்காக ராணுவத்துக்குப் பல பில்லியன்களை முதலீடு செய்கிறது. அதே வேளையில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மையிலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக புதிது புதிதாக எதிரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் மேற்கு நாடுகளுக்கு உள்ளது. நாட்டின் இருப்பைக் காக்கவே ரஷ்யா போராடுகிறது. அதன் பாரம்பரிய எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவே போராடுகிறது.
உக்ரைன் தேசத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதன் ஆட்சி அதிகார மையத்தையே எதிர்க்கிறோம். ரஷ்யாவை எதிர்ப்பதற்காக உக்ரைனை மேற்கு நாடுகள் பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றன. அமைதியான முறையில் தீர்வைக் காண எங்களால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால் எங்கள் முதுகுக்குப் பின்னால் வேறு விதமான சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
-இவ்வாறு புடின் தனது உரையில் தெரிவித்தார்.
ஒன்றே முக்கால் மணிநேரம் நீடித்த உரையில் புடின், உக்ரைன் ஆட்சியாளர்களை முன்னாள் நாஸி ஜேர்மனியுடன் ஒப்பிட்டு அடிக்கடி விமர்சித்தார். ரஷ்யாவுக்காகப் போராடுகின்ற சகலருக்கும் தனது நன்றிக்கடனை வெளியிட்டார்.