துருக்கி பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஜேர்மனி 3 மாத வீஸா.
Kumarathasan Karthigesu
குடும்ப உறவுகளை அழைத்து சிகிச்சை மற்றும் தங்குமிட வசதிகள் வழங்க முடியும்.
உயிரிழப்புத் தொகை 28ஆயிரத்தைக் கடந்தது!!
துருக்கியிலும் சிரியாவிலும் பூகம்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஜேர்மனியில் தற்காலிகமாகத் தங்குவதற்கு மூன்று மாதகால அவசர வீஸா (emergency visas) வழங்கப்படவுள்ளது.
அவசர கால அடிப்படையிலான ஓர் உதவி இது என்று உள்துறை அமைச்சர் நான்ஸி ஃபேசர் (Nancy Faeser) அறிவித்திருக்கிறார். ஜேர்மனியில் வசிக்கின்ற துருக்கி மற்றும் சிரியா நாட்டவர்கள் பூகம்பம் பாதித்த பகுதிகளில் உள்ள தங்களது நெருங்கிய குடும்ப உறவினர்களை வழக்கமான நடைமுறைத் தாமதங்கள் ஏதும் இன்றி விரைவாக ஜேர்மனிக்கு அழைத்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் வதிவிடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மிக விரைவாக இந்த வீஸா வழங்கும் நடைமுறை வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஜரோப்பாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான துருக்கி பூர்வீகவாசிகளைக் கொண்ட நாடு ஜேர்மனி ஆகும். சுமார் முப்பது லட்சம் துருக்கியர்கள் அங்கு வசிக்கிறார்கள்.அவர்களில் சுமார் அரைப் பங்கினர் ஜேர்மனியக் குடியுரிமை பெற்றவர்கள்.
அடுத்ததாக சுமார் 9 லட்சம் பேர் கொண்ட சிரிய சமூகத்தினரும் அங்கு வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் சிரிய உள்நாட்டுப் போரில் தப்பி வந்தவர்கள். முன்னாள் சான்சிலர் அங்கெலா மெர்கல் அம்மையாரின் திறந்த குடியேற்றக் கொள்கை காரணமாக அவர்கள் ஜேர்மனிக்குள் உள்வாங்கப்பட்டனர்.
இதேவேளை, நூற்றாண்டில் நிகழ்ந்த மோசமான பேரழிவு என்று குறிப்பிடப்படுகின்ற நிலநடுக்கங்களால் துருக்கியிலும் சிரியாவிலுமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 28 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 24 ஆயிரத்து 617 பேரும் சிரியாவில் 3ஆயிரத்து 574 பேரும் கொல்லப்பட்டிருப்பது ஆகப் பிந்திய மதிப்பீடுகளில் தெரிய வந்துள்ளது.
பூகம்பம் தாக்கிய மைய ஸ்தானமாக விளங்கும் துருக்கியின் தெற்கு கஹ்ராமன்மரஸ் (Kahramanmaras) நகருக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான முகவரகத்தின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்(Martin Griffiths),உயிரிழப்புகள் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
நிலநடுக்கம் நிகழ்ந்து ஆறு நாட்களின் பின்னரும் இடிபாடுகளிடையே இருந்து இன்னமும் ஆட்கள் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். துருக்கியின் சில பகுதிகளில் கொள்ளை மற்றும் சூறையாடல்களில் ஈடுபட்ட குழுக்களை படையினர் சுட்டு விரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
படம் :துருக்கியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கு மோப்ப நாய்களுடன் செல்லும் ஜேர்மனியின் பணியாளர்கள்.