பரந்தூர் மக்களைச் சந்திக்க மீண்டும் செல்வேன்! முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் – சீமான்
பரந்தூர் மக்களை சந்திக்க மீண்டும் நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிவில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 200-வது நாளாக போராடி வரும் மண்ணின் மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த தம்பி வெற்றி செல்வன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக எதேச்சதிகாரப்போக்கோடு திணிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராகப் போராடுவோரையும், அவர்களுக்கு ஆதரவளிப்போரையும் காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாய் சென்று, தங்களது கோரிக்கையை உலகுக்குத் தெரிவிக்க முயன்ற அம்மண்ணின் மக்களின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்திய திமுக அரசு.
200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கச் செல்வோரைத் தடுத்து நிறுத்திக் கைதுசெய்வது பாசிசத்தின் உச்சமாகும். விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து இறுதிவரை அம்மக்களோடு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும், சனநாயகப் போராட்டம், சட்டப் போராட்டமென என எல்லாநிலையிலும் அத்திட்டத்திற்கு சமரசமின்றி களத்தில் நிற்போமெனவும் உறுதி கூறுகிறேன்.
போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார்.