அலாஸ்கா மீது பறந்த மர்ம ஊர்தி ஒன்றை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!
Kumarathasan Karthigesu
கனடா அருகே ஆர்டிக் கடலில் சிதைவுகளை மீட்கத் தேடுதல்
வானில் அதி உயரத்தில் பறந்த மர்மப் பொருள் ஒன்றைக் கனடா அருகே அலாஸ்கா பகுதிக்கு மேல் வைத்து அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறந்த “சிறிய கார் ஒன்றின் அளவிலான” அந்த வான் ஊர்தியை சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதிச் சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் இராணுவத்துக்கு உத்தரவிட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) அமெரிக்கா எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ருவீற்றர் பதிவிட்டிருக்கிறார்.
அநேகமாக அது ஆட்கள் இன்றிப் பறந்த ஒரு பறக்கும் பொருள் என்றும் கனடா எல்லையில் ஆர்ட்டிக் சமுத்திரத்தின் உறை நீர்ப் பகுதியில் வீழ்ந்த அதன் சிதைவுகளை மீட்க அங்கு தேடுதல்கள் இடம்பெறுகின்றன என்றும் பென்ரகன் தெரிவித்துள்ளது.
அந்த மர்ம வான் ஊர்தி ஒரு பலூனா அல்லது எந்த வகையைச் சேர்ந்த பறக்கும் பொருள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்க வான் பரப்பைக் குறுக்கிட்டுப் பறந்த சீனாவுக்குச் சொந்தமான பலூன் ஒன்றை அத்திலாந்திக் கடலின் மேல் வைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்திய சில தினங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் வடிவம் சீனாவின் உளவு பலூனை ஒத்த நிறத்திலோ அல்லது தோற்றத்திலோ காணப்படவில்லை என்று அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் எப் 22 (F22) போர் விமானங்கள் இரண்டு அந்தப் பறக்கும் பொருளை நெருங்கி அதில் ஆட்கள் எவரும் இருக்கவில்லைஎன்பதை உறுதி செய்த பிறகே அதனைச் சுட்டு வீழ்த்தின என்றும் பென்ரகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலாஸ்கா மீது வைத்து அடையாளம் தெரியாத பொருளைச் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் முடிவுக்குக் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand ) தனது நாட்டின் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கின்ற ஓர் அறிக்கையில் அந்தப் பொருள் கனடாவின் வான் எல்லைக்குள் பறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். வட அமெரிக்காவின் வான் பரப்பைக் பாதுகாக்கின்ற இந்த நடவடிக்கைக்கு கனடாவின் பாதுகாப்பு அமைச்சும் படைப் பிரிவுகளும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு உளவு பலூன் என்று குற்றம்சாட்டி அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஆட்கள் இன்றிப் பறக்கும் சீனாவின் ஆய்வு பலூனின் சிதைவுகளை அமெரிக்கக் கடற்படை மீட்டெடுத்து பரிசோதித்து வருகிறது.
தொலைத் தொடர்பாடல்களை இடைமறிக்கக் கூடிய உணர்வு கருவிகள் உட்படப் பல உபகரணங்கள் அந்த பலூனில் பொருத்தப் பட்டிருந்தன என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.