“வெந்து தணிந்தது காடு!”
செ. அன்புராசா
“வெந்து தணிந்தது காடு” என்ற மதிசுதாவின் இயக்கத்தில் உருவான படத்தினைப் பார்த்துவிட்டு, இத்திரைப்படம் பற்றிச் சில வார்த்தைகளையாவது எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன்.
முதலில் எங்கள் வாழ்வியலை எங்களோடு வாழ்ந்த, வாழுகின்ற ஒரு மகன் — மதிசுதா மிகமிகச் சிறப்பாகவும் செழிப்பாகவும் காத்திரமாகவும் பேசுவது, இயக்குவது, நெறிப்படுத்துவது, வெளிக்கொணர்வது உண்மையில் போற்றுதலுக்குரியது.
மிகமிக உச்சமான, உயர்வான ஒரு படைப்பாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதையிட்டு என் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இயக்குனர் மதிசுதா அவர்களுக்குத் தெரிவித்து நிற்கின்றேன்.இத்திரைப் படத்தினைப் பார்ப்பவர்கள் படத்துடன் ஒன்றித்துப் போவதுதான் இத்திரைப்படத்தின் பெரும் சிறப்பு. அதேவேளை, கண்கள் பனிப்பதும், இதயம் கனப்பதும் தவிர்க்கமுடியாத யதார்த்தங்கள்!
ஒரு பாடல்கூட இல்லாமல், ஒரு காலகட்டத்தில் ஓயாது கேட்கும் போர்க்கால ஒலிகளையும், நீண்ட மௌனமான இடைவெளிகளையும், அவ்வப்போது வந்துபோகின்ற உரையாடல்களையும் வைத்து ஒரு காலத்தின் காதையைப் படம்பிடித்துக் காட்டுயிருப்பது வியப்பைத் தருகின்றது.
மிகக் குறைந்த வளங்களோடு, ஓரிடத்தில் வைத்து, ஒரு பெரும் கதையை — இம்மண்ணின் கதையை மிகவும் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
மானிடத்தை அன்புசெய்கின்ற அதேவேளை போரினைக் கொண்டாடுகின்ற — இப்போருக்கு அறிந்தோ அறியாமலோ துணைபோகின்ற ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய நெஞ்சத்தை உருகவைக்கும் படைப்பு இது!
இம்மண்ணின் உயரிய வாழ்க்கைமுறை எப்படி இருந்தது, குறிப்பாக, போர்க் காலத்திலும் அதன் தரங்குன்றாமல் இருந்த நிலை, விடுதலை வாழ்வுக்காகச் செய்த உண்மையான — உயர்வான தியாகங்கள் எனத் இத்திரைப்படம் தொட்டுச் செல்லும் பல செய்திகளும் இவை சில.
ஒரு மக்கள் குழுமத்தின் உயர்ந்த வாழ்க்கைமுறையையும், அதன் தலைமைத்துவத்தையும் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மனநிலையையும், உயிர்போகும் நிலையிலும் கொண்ட கொள்கையில் கொண்டிருக்கும் உறுதியையும், அதற்காகவே இறுதிவரை நிற்கின்ற மனப்பாங்கையும் சொல்லாமல் சொல்லும் ஒரு மக்கள் குழுமத்தின் காவியம் — வெந்து தணிந்தது காடு!
நிறைவாக, “போர் பொல்லாதது!” அது யாருக்கும், எந்த மக்கள் குழுமத்திற்கும் வரக்கூடாது என்ற செய்தி மிக உச்சமாக வெளிப்பட்டு நிற்கின்றது. இத்திரைப்படம், ஒரு மக்கள் குழுமத்தின் கதையைப்பற்றிப் பேசினாலும், இந்த உலகத்திற்கு இப்போதும் எப்போதும் தேவையான செய்தியைச் சொல்லிச் செல்கின்றது — “போர் பொல்லாதது!”
“வெந்து தணிந்தது காடு” — நம்மவர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய ஓர் உன்னதமான, உயர்ந்த படைப்பு!
செ. அன்புராசா