துருக்கி – சிரியா எல்லையில் பெரும் பூகம்பம்! 1, 200 பேர் உயிரிழப்பு!!

Kumarathasan Karthigesu

நூற்றுக் கணக்கான கட்டடங்கள் இடிந்தன, இத்தாலிக் கரையில் சுனாமி எச்சரிக்கை!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளது எல்லைகளை அண்டிய பெரும் பிரதேசத்தைப் பலமான நில நடுக்கம் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது. ரிச்டர் அளவில் 7.8 ஆகப் பதிவாகிய நில அதிர்வு காரணமாக நூற்றுக் கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்மாகியுள்ளன. குறைந்தது ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை முன்கூட்டியே வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவில் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளிலேயே உயிர்ச் சேதங்கள் அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலி அரசு அதன் கரையோரங்களில் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. பூகம்பத்தின் தாக்கம் லெபனான், சைப்ரஸ், எகிப்து, லிபியா போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

துருக்கியின் உள்நாட்டு நேரப்படி இன்று திங்கள் அதிகாலை 04:17 மணிக்கு நேர்ந்த இந்த இயற்கைப் பேரனர்த்தத்தை அடுத்து மீட்பு மற்றும் அவசர சேவைகளுக்காக அந்நாட்டு அரசு சர்வதேச உதவிகளைக் கோரியுள்ளது. துருக்கியின் தெற்கு மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்மாகியுள்ளன. 13 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று இடிந்து வீழும் காட்சிகள் உட்பட பேரழிவுகளைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.