சீனாவின் பலூனை கடற்பரப்புக்கு மேலே சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!
Kumarathasan Karthigesu
3 விமான நிலையங்கள் பாதுகாப்புக்காக மூடல்!
பலூன் விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கிறது வாஷிங்டன்.
தனது வான்பரப்பில் நுழைந்து பறந்த சீனாவின் உளவு பலூன் ஒன்றை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலே வைத்துச் சுட்டு வீழ்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
சில தினங்களாக அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களின் மேலாக வானில் சந்திரன் போன்ற வட்ட வடிவில் தென்பட்ட அந்த பலூனை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்ரகன் சீனாவின் உளவு ஊர்தி என்று அறிவித்திருந்தது. அதனைத் தீவிரமாகக் கண்காணித்தும் வந்தது. சிதைவுகள் முக்கிய இலக்குகள் மீது வீழ்ந்து சேதங்களை ஏற்படுத்தி விடலாம் என்பதால் அதனைத் தரைப் பகுதிகளுக்கு மேலே வைத்துத் தாக்கி வீழ்த்துவதைப் படை அதிகாரிகள் தவிர்த்திருந்தனர். இன்று சனிக்கிழமை அந்த பலூன் தெற்குக் கரைக்கு அப்பால் அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிக்கு மேலே நகர்ந்து பறந்துகொண்டிருந்த சமயத்தில் அமெரிக்கக் கடற்படை அதனைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. பலூனுடன் இணைந்த கண்காணிப்புக் கருவிகள் உட்பட அதன் பாகங்களைக் கடலில் பாதுகாப்பாக மீட்டெடுக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அதற்கான நடவடிக்கைகளில் கடற்படைக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அது உளவு பலூன் தான் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.
அமெரிக்கர்களது உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவகையில் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்ரின்(Lloyd Austin) அறிவித்திருக்கிறார்.
தெற்குக் கரோலினா கரைக்கு அப்பால் (South Carolina Coast) அந்திலாந்திக் கடலின் மேலே ராணுவ விமானங்கள் மூலம் பலூன் இலக்கு வைக்கப்பட்டுச் சுடப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. அந்த நடவடிக்கைக்காக தெற்குக் கரையோரப் பகுதிகள் மீது பயணிகள் விமானங்கள் பறப்பது சில மணி நேரங்கள் தடைசெய்யப்பட்டது. அங்குள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தன.
சுடப்பட்ட சமயம் பலூன் சுமார் 60 ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. பெரிய வெடிச் சத்தத்தை அடுத்து அது கீழே விழத் தொடங்குவதையும் போர் விமானங்கள் அருகே பறப்பதையும் காட்டுகின்ற படங்களை தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.
வாயு நிரப்பப்பட்ட பிரமாண்டமான அந்த பலூன் பீஜிங் – வாஷிங்டன் இரு தரப்பு ராஜீக உறவுகளில் புதிதாகப் பெரும் நெருக்கடியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலைமையிலேயே அமெரிக்கா அதனைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கன் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை இதனால் ஒத்திவைத்திருக்கிறார்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சு தனது பலூன் அமெரிக்க ஆகாய எல்லைக்குள் பிரவேசித்தமைக்காக வருத்தம் வெளியிட்டு மன்னிப்புக் கோரியிருந்தது.
காலநிலை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்ற ஒரு “சிவில் வானூர்தியே” அது என்றும் விளக்கமளித்திருந்தது. பலூன் விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்க வேண்டாம் என்ற சாரப்படவும் பீஜிங் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதேவேளை, இது போன்ற இரண்டாவது பலூன் ஒன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது பறந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அது குறிப்பாக எந்த நாட்டில் தென்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.