செயற்கை நுண்ணறிவூட்டிய டாங்கி எதிர்ப்பு ரோபோக்களை களமிறக்குகிறது ரஷ்யா!
Kumarathasan Karthigesu
வரும் வசந்த காலத்தில் போரின் போக்கு மாறலாம்.
அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் தங்கள் வசம் உள்ள அதி சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கத் தயாராகிவருவதால் போர்க் களத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான தனது வியூகங்களை ரஷ்யா வகுத்துள்ளது.
அமெரிக்கா 65 தொன்கள் எடை கொண்ட அதன் பிரதான”ஆப்ராம்ஸ்” எம் 1 (Abrams M1 tanks) போர் டாங்கிகள் உட்பட பல இராணுவக் கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்புகின்றது. அதேபோன்று ஜேர்மனியும் அதன் புகழ்பெற்ற லியோபாட் – 2 (Leopard 2) வகை டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், நோர்வே போன்ற மேற்கு நாடுகளும் கவச வாகனங்கள் உட்பட இராணுவ சாதனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. மேற்குலகின் இந்தப் போர் டாங்கிகள் உக்ரைன் போரில் வரவிருக்கின்ற வசந்த காலப்பகுதியில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு போரின் போக்கு மாறுவதற்கு ஏதுவான ஒரு களநிலைமை தென்படுகின்ற பின்னணியிலேயே மொஸ்கோ அதன் நவீன தொழில்நுட்பப் போர்த் தளபாடங்களை வெளியே எடுத்துப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
மேற்கு நாடுகளின் டாங்கிகளை எரித்து அழிக்கும் சக்தி வாய்ந்த “மார்க்கர்”(Marker) என்ற ரோபோ கவச வாகனங்களை மொஸ்கோ கடந்த வாரம் உக்ரைனின் தென் பகுதியில் களமிறக்கிப் பரீட்சித்துள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட-(artificial intelligence system) சுயமாக ஏவாயுதங்களை இயக்கவல்ல- “மார்க்கர்” ரோபோக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன என்ற தகவலை ரஷ்யாவின் மத்திய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Russian federal space agency Roscosmos) முன்னாள் இயக்குநர் ஜெனரல் திமித்ரி ரோகோசின், (Dmitry Rogozin) “ஸ்புட்னிக்” செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆட்கள் இன்றி இயங்கக் கூடிய இந்த நவீன ரோபோ கவச வாகனங்கள் சுமார் மூன்று தொன்கள் எடையில் சிறிய டாங்கியின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டவை. தூரக்கட்டுப்பாட்டு(remote-controlled) முறையிலும் சுயமாகவும் (autonomous) இயங்க வல்லவை. தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைத் தம்வசம் எடுத்துச் சென்று எதிரியின் கவச வாகனங்களை அழித்தொழிக்கக் கூடியவை. வீதிகள் இல்லாத தரைப்பகுதிகளையும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளையும் இலகுவில் கடந்து முன்னேறக் கூடியவை. ரோபோ டாங்கியின் மேற் பகுதி நொடிக்கு 540 டிகிரி (degrees) சுழன்று திரும்பக் கூடியது. கவசவாகன எதிர்ப்பு ஏவுகணைகள், கிரனேட் லோஞ்சர்கள் போன்றவற்றை அதில் பொருத்தி இயக்க முடியும். எனினும் அதன் தொழில் நுட்பத் திறன் குறித்த முழு விவரங்களையும் ரஷ்யா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
போர்க் களத்தில் இந்த ரோபோ டாங்கிகளில் ஒன்றைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் தொழில்நுட்ப ரகசியங்களை அறிந்து கொள்ளலாம் என்று உக்ரைன் பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
சிரிய யுத்தத்தில் இது போன்ற சில இராணுவ சாதனங்களை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது. எனினும் அவற்றின் ஆகப்பிந்திய தயாரிப்பான “மார்க்கர்” ரோபோக்கள் நவீன போர்க்களம் ஒன்றில் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல் முறை ஆகும். எனவே உக்ரைன் பாதுகாப்புப் படையினர் உட்பட சர்வதேச ராணுவ நிபுணர்கள் பலரது எதிர்பார்ப்புக்கள் இந்த ரோபோ கவச வாகனங்கள் மீது குவிந்துள்ளன.
ரஷ்ய ராணுவம் அண்மையில் உருவாக்கிய டாங்கி எதிர்ப்பு ரோபோ கவச (robotic tank killer) வாகனப் படைப் பிரிவைச் சேர்ந்தது மார்க்கர். அதன் முதலாவது போர்க்களமாக மாறுகின்றது உக்ரைன்.