பொருளாதார நெருக்கடி காரணமாக 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூகுள் அறிவிப்பு.
பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று காலை கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த இமெயிலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை அனுப்பிய இமெயிலில், “நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும். இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம்.
மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்,” என அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மெயிலில் கூறியுள்ளார்.