“இலங்கை அகதிகள் ரியூனியனுக்கு வருவது மிகவும் ஆபத்தானது!”
Kumarathasan Karthigesu
இலங்கையில் இருந்து படகில் புறப்பட்டு இந்துமா கடலின் தெற்கு மண்டலம் முழுவதையும் தாண்டி ரியூனியன் தீவுக்கு வருவது என்பது மிகவும் ஆபத்தானது. சந்தேகத்துக்கு இடமின்றி அது மிகச் செலவானது. அதேசமயம் அனைவரும் அங்கிருந்து அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்பதும் உறுதி.இந்தச் செய்தியை நாங்கள் இங்கிருந்து இலங்கைக்கு விடுக்க விரும்புகின்றோம்.
ரியூனியன் தீவின் பொலீஸ் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரெஞ்சு அதிகாரி ஜெரோம் பிலிப்பினி (Jérôme Filippini) இவ்வாறு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் நிர்வாகத்துக்குட்பட்ட ரியூனியன் தீவை நோக்கி இலங்கையர்கள் வருவது அதிகரித்துள்ளது. அதனை ஒரு குடியேறிகளின்”படையெடுப்பாகக்” கருதலாமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“8 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்ற ஒரு தீவுக்கு ஐந்து ஆண்டுகளில் 400 பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். எனவே என்னைப் பொறுத்தவரை அதனைக் குடியேறிகளது “படையெடுப்பு” என்று சொல்லிவிட முடியாது ” – என அந்த அதிகாரி பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :
இலங்கையில் இருந்து ஒவ்வொரு படகும் வருகை தரும் போதெல்லாம் பிரான்ஸின் சட்டங்களை நாங்கள் சரிவரப் பின்பற்றுகின்றோம். கப்பலில் இருந்து அவசர உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டாலோ அல்லது கப்பல் ஆபத்தில் சிக்கினாலோ முதலில் நாங்கள் கடலில் உதவச் செல்கிறோம்.
நாட்டின் கரையை நெருங்கி வருகின்ற கப்பலில் இருந்தோ அல்லது படகில் இருந்தோ அடையாளம் காட்டி ஆபத்து உதவி கோரப்பட்டால் உடனடியாக அதனை மீட்பதே சர்வதேசக் கடப்பாடு என்று கடற்சட்டம் சொல்கிறது. இலங்கைப் படகுகள் விடயத்திலும் நாங்கள் அந்தச் சட்டங்களை மதித்துப் பின்பற்றுகின்றோம். அவர்களை யார் என்று பார்க்காமல் முதலில் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வருகின்றோம். காத்திருப்பு மையங்களில் தங்க வைத்து வெளிநாட்டினருக்கான உரிமைகளின் கீழ் அவர்களைப் பராமரிக்கின்றோம்.
அவர்களது நிலைவரங்கள் பரிசோதிக்கப்பட்டு கோரிக்கைகள் பல நீதிவான்கள் அடங்கிய குழுக்களால் பெறப்படுகின்றன.
இதுவரை வருகை தந்த நானூறு பேரில் 276 பேர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 120 பேர்வரை இன்னமும் தீவில் தங்கியுள்ளனர். அனைவருமே அரசியல் புகலிடத்தை எதிர்பார்த்துள்ளனர். சுமார் நாற்பது பேருக்கு மட்டுமே தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ரியூயனுக்கு வருகின்ற இலங்கை குடியேறிகள் பத்துப் பேரில் ஏழு பேர் அங்கிருந்து திருப்பித் தாயகத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்கள் சட்ட விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். 276 பேரைத் திருப்பி அனுப்பியிருப்பதன் மூலம் அங்கிருந்து மேலும் சட்டவிரோத பயணங்களைச் செய்ய இருப்போருக்குக் “முக்கியமான செய்தி” ஒன்றை விடுத்துள்ளோம்.
இலங்கைக் குடியேறிகளின் வருகையை ஒரே இரவில் நிறுத்திவிட முடியாது என்பது அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இப்போதைக்கு இந்தக் கடலோடிகளுக்கு நாங்கள் ஒரு செய்தியை மட்டுமே விடுக்க முடியும். உயிரைப் பணயம் வைத்து மாகடல் தாண்டிவருகின்ற பயணம் மிகவும் ஆபத்தானது. அவர்களுக்கான சிறந்த ஒர் இறுதி இடமாக ரியூனியன் தீவு இருக்கப்போவதில்லை. ரியூனியன் சட்டவிரோத குடியேறிகளது புகலிடமாக இருக்காது என்பதே அந்த செய்தி ஆகும்.
இந்துமா கடலின் தென் பகுதி முழுவதையும் கடந்து வரும் கடற்பயணத்தின் வழியில் இலங்கைப் படகுகள் மொறீஸியஸ்(Mauritius) தீவின் கடல் எல்லையையும் தாண்டி வருகின்றன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் உள்ள சாகோஸ் தீவில் (Chagos) எரிபொருள் நிரப்புகின்றன. ஆனால் அங்கெல்லாம் அவர்கள் அவசர உதவி கோருவதில்லை. புகலிடம் கேட்பதில்லை. ரியூனியன் எல்லைக்குள் வந்த பிறகே மீட்பு உதவி கோருகின்றனர். அவர்களது பயணத்தின் முடிவிடம் அது தான். ஏனெனில் அவர்கள் பிரான்ஸுக்கு வரவே விரும்புகின்றனர். பிரான்ஸ் தேசம் அழகானது.
-இவ்வாறு ரியூனியன் தீவின் பொலிஸ் நிர்வாக அதிகாரி ஜெரோம் பிலிப்பினி (Jérôme Filippini) நிலைமையை விவரித்துள்ளார்.